உலகம்

"உங்களுக்கு என்ன பைத்தியமா?" - கார் மூலம் ஹோட்டலையே சேதப்படுத்திய நபர்! காரணம் இதுதான்!

webteam

லேப்டாப் காணாமல் போனதற்காக, காரைக் கொண்டு ஓட்டலைச் சேதப்படுத்திய ஒருவரின் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், சென் என்ற 28 வயது நபர் தங்கியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த லேப்டாப் தொலைந்து போயுள்ளது. இதுகுறித்து ஓட்டல் நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சரியான தகவல் அளிக்காததால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒருகட்டத்தில் இதனால் கோபமடைந்த சென், வேகமாய் வெளியேறி வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய சொகுசு காரை ஓட்டிச் சென்று ஓட்டலின் வரவேற்பறையைச் சேதப்படுத்தியுள்ளார்.

அப்போது ஓட்டல் ஊழியர்கள், "நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரிகிறதா? உங்களுக்கு அறிவு இருக்கிறதா, உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது” எனக் கேள்வி எழுப்பியும் அவர் காரை நிறுத்தாமல், அங்கிருந்த அலங்கார பொருட்கள், மேஜைகள், கண்ணாடிகள் உள்ளிட்டவற்றின் மீது காரை மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இறுதியாக ஒரு தூணில் மோதி கார் நின்றபோது, கார் கண்ணாடியை உடைத்து அந்த நபரை ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஜெ.பிரகாஷ்