அமெரிக்காவில் யூத வழிபாட்டுத்தலத்தில் 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்துவைத்துகொண்டு பாகிஸ்தான் மருத்துவ விஞ்ஞானி ஒருவரை விடுவிக்கவேண்டும் என மிரட்டிய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் டெக்சாசில் யூத வழிபாட்டுத் தலத்துக்கு சென்றவர்களை ஒரு நபர் பணையக் கைதியாக பிடித்து வைத்துக்கொண்டதாகத் தெரிகிறது. அமெரிக்காவில் சிறைதண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த ஆஃபியா சித்திக்கியை விடுவிக்கவேண்டும் என அந்த நபர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அந்த நபருடன் தொடர்ந்து 10 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லாததால் காவல் சிறப்பு படையினர் உள்ளே நுழைந்து மிரட்டல் விடுத்த நபரை சுட்டுக்கொன்று பணய கைதிகளை விடுவித்தனர்.
பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த வர் பிரிட்டன் நாட்டை சேர்ந்த மாலிக் ஃபைசல் அக்ரம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் சிலரை கொன்ற புகாரில் பாகிஸ்தான் மருத்துவ விஞ்ஞானி ஆஃபியா சித்திக்கி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அல்கய்தா இயக்கத்தினருடன் அவருக்கு தொடர்பிருந்ததாகவும் கூறப்பட்டது.
நான்கு பேர் பணய கைதிகள் மீட்கப்பட்டது தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என கூறியுள்ளார். துப்பாக்கிகளை விற்பதற்கு முன் அவற்றை வாங்குவோரின் பின்னணியை அறிந்துகொள்வது அவசியம் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிக்க: தடுப்பூசி விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பால் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறும் நோவக் ஜோகோவிச்