உலகம்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் எங்கு செல்லலாம்?எங்கு செல்ல வேண்டாம்?

உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் எங்கு செல்லலாம்?எங்கு செல்ல வேண்டாம்?

கலிலுல்லா

உக்ரைனில் யுத்த பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் மேற்கு எல்லைக்கு செல்வதற்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ள இலவச ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் இந்தியர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உள்நாட்டு மக்கள், அங்கு வசிக்கும் இந்தியர்கள் என பலரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இதுபோன்றவர்களை பாதுகாப்பாக தங்கள் நாட்டின் மேற்கு எல்லைக்கு கொண்டு சென்று விடுவதற்கு கட்டணமில்லா ரயில்கள் இயக்கப்படுவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனின் மேற்கு எல்லை வரை சென்று அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு செல்ல வசதியாக இலவச ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த ரயில்களை இந்தியர்கள் தங்களது பாதுகாப்பு சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுவரை எவ்வித அறிவிப்பும் இன்றி வெளியேற வேண்டாம் என்று கூறி வந்த இந்திய தூதரகம், தற்போது மேற்கு எல்லைக்கு செல்வதற்கு இந்தியர்களை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் உக்ரைனிலிருந்து தப்பி வரும் இந்திய மாணவர்கள் விசா இன்றி போலந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் ஆடம் புரோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.