உலகம்

பாகிஸ்தானில் உற்சாகமிழந்து தவித்த யானை.... பாடல்களால் புத்துணர்வு

பாகிஸ்தானில் உற்சாகமிழந்து தவித்த யானை.... பாடல்களால் புத்துணர்வு

webteam

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மிருகக் காட்சி சாலையில் இருந்து கம்போடியாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ள காவான் எனப்படும் யானை உற்சாகமிழந்து காணப்பட்டது. பல மணி நேரம் அமைதியாக இருந்த அந்த யானைக்கு அமெரிக்கப் பாடகர் பிராங்க் சினாட்ராவின் பாடல்கள் மூலம், கால்நடை மருத்துவர் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

(அமெரிக்கப் பாடகர் பிராங்க் சினாட்ரா)

அமெரிக்கப் பாடகர் செர் என்பவரின் நான்கு ஆண்டுகால சர்வதேசப் பிரச்சாரத்தின் பலனாக சிரமப்பட்டுக் கொண்டிருந்த காவான் யானையை கம்போடியாவுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த யானைக்கு வயது 36. மிகச் சிறிய இடத்தில் சிரமங்களை அனுபவித்து வந்த காவான் யானையுடன் இருந்த மற்றொரு யானை நோயுற்று உயிரிழந்தது.

கால்நடை மருத்துவரான அமீர் கலீல், போர்ப் பகுதிகளில் சிக்கியுள்ள வனவிலங்குகளைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். காவான் யானைக்கு பத்து நாட்களுக்கு முன் சில பயிற்சிகளை வழங்கி, அதனுடன் அவர் சிநேகத்தை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் பிராங்க் சினாட்ராவின் ‘மை வே’ என்ற பாடலைப் பாடி யானையை உற்சாகப்படுத்தினார்.

இதன் காரணமாக, காவான் யானை புத்துணர்வு அடைந்து சில ஆப்பிள்களையும் சாப்பிட்டுள்ளது. எனவே பயணம் செய்வதற்கு அதற்கு சிரமங்கள் ஏற்படாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சில நாட்களில் காவான் சிறந்த வாழ்க்கைக்காக வெகுதூரம் பயணம் செய்யவுள்ளது.