உலகம்

ஜிம்பாப்வேயில் வெடித்தது கலவரம்

ஜிம்பாப்வேயில் வெடித்தது கலவரம்

webteam

ஜிம்பாப்வேயில் நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. 

ஜிம்பாப்வே நாட்டில் 37 ஆண்டுகாலமாக பதவியில் இருந்த முன்னாள் அதிபர் முகாபேவை ராணுவம் ஆட்சியில் இருந்து அகற்றிய பின், முதன் முறையாக பொதுத் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 210 தொகுதிகளில் 140 தொகுதிகளில் ஆளும் ஜானு பிஎஃப் கட்சி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பிரதான எதிர்க்கட்சி 58 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

நாடாளுமன்றத்தில் அதிபர் எம்மர்சனின் கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்த உடன் ஜிம்பாப்வேயில் போராட்டங்கள் வெடிக்க தொடங்கின. தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, எதிர்க்கட்சியினர் ஹராரேவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்து, கலவரம் ஏற்பட்டதால், பெரும் ‌பதட்டம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கற்களை வீசியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ராணுவத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனால் ஜிம்பாப்வேயில் பதட்டமான சூழல் நிலவுகிறது. ஜிம்பாப்வே அரசியல்வாதிகள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியா கட்டர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரோ ஜிம்பாப்வேயில் நடக்கும் வன்முறைகளுக்கு கவலை தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டன் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களின் போராடும் உரிமை பறிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஆம்னெஸ்டி அமைப்பு ஜிம்பாப்வே அரசு உடனடியாக துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.

முகாபே பதவி நீக்கம் செய்த பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் ஜிம்பாப்வே மக்களும் சர்வதேச சமூகமும் உற்றுநோக்கிய தேர்தலாக இது இருந்தது. முதன்முறையாக வெளிநாட்டை சேர்ந்த பார்வையாளர்கள் தேர்தலை கண்காணிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆப்ரிக்க ஒன்றியத்தை சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள் , இந்தத் தேர்தல் சட்டத்தின் படி நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் தேர்தலின் போது ஊடகங்கள் பாரபட்சம் காட்டியதாகவும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட மிரட்டப்பட்டதாகவும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் பார்வையாளர்கள் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில்தான் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. போராட்டத்தை ஒடுக்க அரசு ராணுவத்தை ஏவியது தான் சர்வதேச அரங்கில் விவாதத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இந்தக் கலவரத்துக்கு எதிர்க்கட்சிகளே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ள அதிபர் எம்மர்சன் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் வரை பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.