உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 1,500 பேர் பலியாகினர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் சிதைந்து போயிருந்த அக்கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த இடம், சுற்றுலா பயணிகளும் பார்வையிடும் வகையில் பாதுகாப்பாக மாற்றப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த OceanGate Expeditions என்ற ஆழ்கடல் பயணங்களை ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனம், தனது நீர்மூழ்கி கப்பலில் சுற்றுலா பயணிகளை இந்த இடத்துக்கு அழைத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது.
OceanGate Expeditions நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பல், கடந்த 2021-ம் ஆண்டு முதல் நீருக்கடியில் டைட்டானிக்கின் சிதைவு மற்றும் மூழ்கிய கடல் லைனரைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலைப் பதிவுசெய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமையன்று 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேரை ஏற்றிக்கொண்டு டைட்டானிக் கப்பலின் மூழ்கிய இடத்திற்கு 22 அடி நீளமுள்ள டைட்டன் நீர்மூழ்கி பயணம் மேற்கொண்டது.
பயணத்தில் இருந்தவர்கள் விபரம்:
ஹாமிஷ் ஹார்டிங் (வயது 58) : பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரான இவர், சாகச பயணங்கள் செய்வதில் அதீத விருப்பம் கொண்டவர். விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.
ஷாஸாதா தாவூத் (வயது 48) : பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.
சுலேமான் தாவூத் (வயது 19) - மேற்கூரிய ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர். science fiction புத்தகங்களின் மீது தீராத காதல் கொண்ட இவர், சமீபத்தில் தான் யுகே-வில் உள்ள ஏசிஎஸ் சர்வதேச பள்ளியில் பட்டம் பெற்றார்.
பவுல் ஹென்றி நர்கோலெட் (வயது 77) : பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்திருக்கும் இவர், டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர். டைட்டானிக் கப்பலைப் பார்க்கச் செல்லும் பயணங்களில் முதல் பயணத்தின் போதே இடம் பெற்றவரான இவர் “மிஸ்டர் டைட்டானிக்” என்ற பட்டப்பெயரோடு அழைக்கப்படுகிறார்.
ஸ்டாக்டன் ரஷ் (வயது 61) : இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி.
சுற்றுலாவிற்கு சென்ற நீர்மூழ்கி கப்பல் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே அட்லாண்டிக் கடலில் திடீரென மாயமாகி விட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. நீர்மூழ்கிக் கப்பல் கிளம்பிய ஒரு மணி நேரம் மற்றும் 45 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தகவலை சம்பந்தப்பட்ட OceanGate Expeditions நிறுவனமும் உறுதிபடுத்தியது. இதையடுத்து நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதியில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மாயமான நீர்மூழ்கி கப்பலில் அவசர காலத்தின்போது 90 மணி நேரம் உயிர்வாழ உதவும் அளவுக்கான ஆக்சிஜன் உள்ளதென தொடக்கத்தில் சொல்லப்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த நிலையில், திங்கள்கிழமை இரவு கணிப்பின்படி அளவு இதன் அளவு 70 - 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் என்று மாறியிருக்கும் என கூறப்பட்டது. இது செவ்வாய்க்கிழமை இரவு 30 - 40 அளவிலோ, அல்லது 30-க்கும் குறைவாகவோ ஆகியிருக்குமென கணிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டது. ஆனாலும் கடலோர காவல்படையினர் அவர்களை தேடும் பணியை நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொண்டனர்.
அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாள்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில் சுற்றுலா சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதாகவும், அதிலிருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாகதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.
டைட்டனில் அழிவை ஏற்படுத்தக்கூடிய வகையில் அழுத்த அறையானது வெடித்து சிதறியதாகவும், அதன் பாங்களின் 5 பெரிய துண்டுகள் டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கடலோரப்படை, அவர்களின் உடல்கள் எப்போதாவது மீட்கப்படும் என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (ROVs) தளத்தில் இருக்கும் என்றாலும், அடுத்த 24 மணிநேரத்தில் தேடுதல் பணி படிப்படியாக நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
அமெரிக்க கடலோர கப்பல் படை அறிவிப்பிற்கு பிறகு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ஓஷன்கேட் நிறுவனம், அதில் “எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று இப்போது நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.