தாய்லாந்து இளைஞர் ட்விட்டர்
உலகம்

மன்னராட்சியை விமர்சித்த இளைஞர்: 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த தாய்லாந்து நீதிமன்றம்!

தாய்லாந்தில் முடியாட்சியை அவமதித்த நபருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Prakash J

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டில் அரச முடியாட்சியை அவமதிக்கும் விதமாக, மோங்கோல் திரகோட் என்பவர் ஃபேஸ்புக்கில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அப்போது இதுகுறித்த வழக்கு விசாரணையில் அவருக்கு நீதிமன்றம் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.

இந்த வழக்கு தற்போது மீண்டும் மேல்முறையீட்டுக்கு வந்தபோது அவருக்கு, நீதிமன்றம் கூடுதலாக 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. லெஸ் மெஜஸ்ட் சட்டத்தின் (lese majeste law) கீழ் தாய்லாந்து நாட்டில் வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனை இதுவாகும்.

இதனால் தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியை சேர்ந்த ஆன்லைன் ஆடை விற்பனையாளர் திரகோட் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க உள்ளார்.

தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிராக வெளிவரும் அனைத்துக் கருத்துகளும் லெஸ் மெஜஸ்ட் சட்டத்தின்கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. 10 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு இருப்பினும், விமர்சனத்திற்கு உள்ளாகும் இந்த மெஜஸ்ட் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஈரான் - பாகிஸ்தான் இடையே திடீர் மோதல்: பின்னணி காரணம் என்ன? உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன? ஓர் அலசல்