உலகம்

மியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை ! திரைப்படமாகிறது சிறுவர்களின் கதை

மியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை ! திரைப்படமாகிறது சிறுவர்களின் கதை

தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தச் செய்தி பரபரப்பானது. அவர்களை எப்படி மீட்பது என்று விவாதிக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகளை சேர்ந்த தலைசிறந்த நீச்சல் வீரர்கள் தாய்லாந்தில் குவிந்தனர். இதில் திறமை வாய்ந்த 12 வீரர்கள் மற்றும் ஒரு டாக்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலில் செல்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 8-ம் தேதி அவர்கள் குகைக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 4 சிறுவர்களும் மறுநாள் 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். மேலும் நான்கு பேரும் பயிற்சியாளரும் செவ்வாய்க்கிழமை  மீட்கப்பட்டனர்.

இப்போது இந்தக் குகை வாழும் மியூசியமாக மாற்றப்படும என்று தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா தெரிவித்துள்ளார். மேலும் அவர் "இந்த மீட்பு பணிகள் எப்படி நடந்தது என்பதை சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கும் வகையில் இந்த மியூசியம் செயல்படும். மேலும் சியாங் ராய் குகையின் அனைத்துப் பகுதிகளிலும் இனி காவல் அமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள். எனினும் அக்டோபர் வரை தாய்லாந்தில் மழைக் காலம் என்பதால் இப்போதைக்கு இந்தத் திட்டம் செயல்படாது" என்றும் தெரிவித்துள்ளார்.

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் 12 பேருக்கும் தாய்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தச் சிறுவர்கள் நலமுடன் இருப்பதற்கு ஆதாரமாக மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டது தாய்லாந்து அரசு.

ஹாலிவுட் படம்

தாய்லாந்து குகை சிறுவர் மீட்பு சம்பவம் விரைவில் ஹாலிவுட்டில் திரைப்படமாக உருவாகவுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பியூர் ஃபிளிக்ஸ் திரைப்பட நிறுவனம், தாய்லாந்து சம்பவத்தைத் திரைப்படமாக்க முடிவெடுத்துள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ஸ்காட், ஆடம் ஸ்மித் இதுகுறித்து ஊடகங்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

தாய்லாந்துப் பெண்ணைத் திருமணம் செய்துள்ள ஸ்காட், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடல் அதிரடிப்படை முன்னாள் வீரர் குனான், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணம் அடைந்தது தன்னைத் தனிப்பட்ட முறையில் பாதித்ததாகக் கூறியுள்ளார். மரணமடைந்த குனானும் ஸ்காட்டின் மனைவியும் பள்ளிக்காலங்களில் நண்பர்களாக இருந்தவர்கள். இந்தப் படத்துக்காக அதிகபட்சமாக ரூ. 413 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.,