உலகம்

குகைக்குள் இருளில் தவிக்கும் 12 சிறுவர்கள்.. தொய்வில்லாத மீட்புப் பணியில் வீரர்கள்..!

குகைக்குள் இருளில் தவிக்கும் 12 சிறுவர்கள்.. தொய்வில்லாத மீட்புப் பணியில் வீரர்கள்..!

Rasus

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் 12 சிறுவர்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவின் தலைவர் நரோங்சாக் ஒசோட்டான்கோர்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த 23-ஆம் தேதி, 16 வயதுக்கு உட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்கு சென்றனர். அப்போது திடீரென மழை பெய்து குகை நுழைவுவாயிலில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இவர்கள் வெளியே வர முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். அவர்களின் நிலைமை என்ன ஆனது என தெரியாமல் நாடே பதற்றத்தில் ஆழ்ந்தது. ஆனால் 9 நாட்களுக்கு பிறகு அவர்கள் குகைக்குள்ளே பல கிலோமீட்டர் தள்ளி ஒரு சின்ன திட்டின்மீது தவித்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவர்களில் பலருக்கு நீச்சல் தெரியாததால் மீட்புப் பணி தாமதமானது. தாய்லாந்து ராணுவமும், கடற்படையும் இவர்களை மீட்கும் பணியை தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை, வடியாத வெள்ளம், சேறு, சகதி ஆகியவை மீட்பு பணிகளில் சிக்கலை ஏற்படுத்தின. அதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவிலான செய்தியாக மாறியது. பல நாடுகளை சார்ந்த அனுபவம் வாய்ந்த ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மீண்டும் மழை பெய்தால் மீட்புப் பணிகள் கடும் பின்னடைவை சந்திக்கும் என்ற சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அடுத்த மூன்று நாட்கள் பருவநிலை சாதகமாக இருப்பதாக மீட்பு குழுவின் தலைவர் நரோங்சாக் கூறியுள்ளார். இன்றே மீட்பு பணிகளை மேற்கொள்ளும் நாள் என கூறியுள்ள அவர் எந்த சவாலையும் சமாளிக்க சிறுவர்கள் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். முதல் சிறுவன் வெளியே வருவதற்கே சுமார் 11 மணி நேரம் ஆகும் என அவர் தெரிவித்தார். இதனால் முதல் சிறுவன் இந்திய நேரப்படி இரவு சுமார் 7:30 மணியளவில் வெளியே கொண்டு வரப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த 1000ற்கும் அதிகமான செய்தியாளர்களை, மீட்புப் பணிக்கு இடையூறு விளைவிக்காமல் விலகிச் செல்லும்படி அரசு அறிவுறுத்தியது.