பிரவிட் வோங்சுவோன் எக்ஸ் தளம்
உலகம்

புதிய பிரதமர் குறித்த கேள்வி! கோபத்தில் பெண் நிருபரின் தலையில் தட்டிய தாய்லாந்து மூத்த தலைவர்!#Video

புதிய பிரதமர் குறித்த கேள்வியின்போது, தாய்லாந்து பெண் நிருபர் ஒருவரை முன்னாள் ராணுவத் தளபதி தலையில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

தாய்லாந்து நாட்டு அமைச்சரவையில் பிச்சித் சைபான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 2008-ஆம் ஆண்டு, நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றவர் ஆவார். அவரை அமைச்சராக்கியது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்தப் பதவியை, பிச்சித் சைபான் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், பிச்சித் சைபானை அமைச்சராக நியமிக்க பரிந்துரை செய்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

பின்னர், புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு செய்யப்பட்டார். இவர், தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் அந்நாட்டின் மிக இளம்வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பேடோங்டர்ன் ஷினவத்ரா

இந்த நிலையில், பலாங் பிரசாரத் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான பிரவிட் வோங்சுவோன், கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம், தாய்லாந்தின் புதிய பிரதமர் குறித்து, ’தாய் பிபிஎஸ்’ ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பிரவிட் வோங்சுவோன், அவரது தலையில் தட்டியபடியே செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, அந்தப் பெண் பத்திரிகையாளர் முறையாக வழக்குப்பதிவு செய்தால், தாய்லாந்து நாடாளுமன்றம் விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ’சம்பாதிக்க சொல்லுங்க’ - மாதம் ரூ.6 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட பெண்.. ஆலோசனை கூறிய நீதிமன்றம்! #Video

இந்த செயலுக்கு தாய்லாந்து பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அது, ”பிரவிட்டின் செயல்கள் பத்திரிகைகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை அச்சுறுத்துவதாகவும் துன்புறுத்துவதாகவும் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.

தாய் பிபிஎஸ்ஸின் நிர்வாக ஆசிரியர் நோப்பதோல் ஸ்ரீஹதை, “அவருடைய இந்தச் செயல் பத்திரிகையை அச்சுறுத்துகிறது. அவர், ஒரு நிருபரை காயப்படுத்துவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு பொது அமைப்பாக, ஊடகப் பணிகள் எதிர்காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்க, பத்திரிகையாளர்களின் உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, PPRP கட்சியின் செய்தித் தொடர்பாளர், “அந்தப் பத்திரிகையாளர் எங்களுக்கு தெரிந்தவர். அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளோம்” எனப் பதிலளித்துள்ளார்.

பிரவிட் வோங்சுவோன், கடந்த ஆண்டு வரை ஆட்சி செய்த ராணுவ ஆதரவு அரசாங்கத்தின் கீழ் துணைப் பிரதமராகப் பணியாற்றினார். தவிர, 2000களின் முற்பகுதியில் தாய்லாந்தின் ராணுவத் தளபதியாக இருந்தார். அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ராவை வெளியேற்றி, 2014 ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர்களில் பிரவிட்டும் ஒருவர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: A1, A2 பால் பொருட்களா? உடனே அகற்றவும்.. உணவு தர நிர்ணய அமைப்பு உத்தரவு!