உலகம்

மீண்டும் சர்வதேச போட்டியில் தாய்லாந்து குகை சிறுவர்கள்..!

மீண்டும் சர்வதேச போட்டியில் தாய்லாந்து குகை சிறுவர்கள்..!

webteam

தாய்லாந்து குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் சர்வதேச போட்டியில் பங்கேற்க அர்ஜென்டினா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த ஜுலை மாதம் 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தச் செய்தி பரபரப்பானது. 

அவர்களை எப்படி மீட்பது என்று விவாதிக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகளை சேர்ந்த தலைசிறந்த நீச்சல் வீரர்கள் தாய்லாந்தில் குவிந்தனர். இதில் திறமை வாய்ந்த வீரர்கள் மற்றும் ஒரு டாக்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலில் செல்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் குகைக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சமன் குனொந்த் என்ற முன்னாள் கடற்படை வீரர், தாமாக முன் வந்து சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். முங்கு நீச்சலில் அனுபவம் மிக்கவரான அவர், குகையில் சிறுவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டு திரும்பும் போது, போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்தார்.  

பின்னர் கடும் போராட்டத்துக்குப் பின், முதற்கட்டமாக 4 சிறுவர்களும் மறுநாள் 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். பின்னர் 4 சிறுவர்களும் பயிற்சியாளரும் மீட்கப்பட்டனர். 17 நாட்களுக்குப் பிறகு குகைக்குள் இருந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டது பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்தச் சம்பவத்தில் மீட்கப்பட்ட அனைவரும் தற்போது இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அர்ஜென்டினா சென்றுள்ளனர்.

அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற ரிவர்பிளேட்(River Plate)அணியுடன், தாய்லாந்தின் வைல்டு போஃர்ஸ் (Wild Boars) அணியினர் விளையாடினார். வைல்டு போஃர்ஸ் அணி தான் தாய்லாந்தில் உள்ள குகையில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பயிற்சிப் போட்டியில் விளையாட மைதானத்திற்குச் சென்ற தாய்லாந்து இளம் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.