உலகம்

குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்டது எப்படி..? வெளியானது புது தகவல்..!

குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்டது எப்படி..? வெளியானது புது தகவல்..!

webteam

தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட விஷயத்தில் புது தகவல்கள் வெளியாகி உள்ளது.

தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தச் செய்தி பரபரப்பானது. அவர்களை எப்படி மீட்பது என்று விவாதிக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகளை சேர்ந்த தலைசிறந்த நீச்சல் வீரர்கள் தாய்லாந்தில் குவிந்தனர். இதில் திறமை வாய்ந்த 12 வீரர்கள் மற்றும் ஒரு டாக்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலில் செல்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 8-ம் தேதி அவர்கள் குகைக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 4 சிறுவர்களும் மறுநாள் 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். மேலும் நான்கு பேரும் பயிற்சியாளரும் நேற்று  மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட விஷயத்தில் புது தகவல் கிடைத்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்ட நீரில் மூழ்கும் வீரர் இதுகுறித்து கூறும்போது, “ சிறுவர்களின் பதட்டத்தை தணிப்பதற்காக அவர்களுக்கு சிறிய மருந்து கொடுக்கப்பட்டது. இதன்மூலம் அவர்கள் தூக்க நிலைக்கு சென்றனர். ஸ்ட்ரெட்சரிலும் அவர்கள் தூங்கிய நிலையிலேயே இருந்தனர். மிக அதிகமான இருட்டிற்குள் குறுகலான பாதை வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர்கள் பயந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்யப்பட்டது. ஸ்ட்ரெட்சரையும் மூடிய நிலையிலேயே வைத்திருந்தோம். இருந்தாலும் அவர்களின் சுவாசம், பல்ஸ் ரேட், உடல்நலம் ஆகியவை வரும் வழியில் அடிக்கடி கண்காணிப்பட்டு வந்தது” என தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் ஒரு காலத்திற்குள் அவர்கள் வீடு திரும்பி விடுவார்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.