உலகம்

ஆறே நாளில் மீண்டும் 2-ம் இடத்தில் எலான் மஸ்க்... உலக பணக்காரர் பட்டியலில் சரிவு ஏன்?

ஆறே நாளில் மீண்டும் 2-ம் இடத்தில் எலான் மஸ்க்... உலக பணக்காரர் பட்டியலில் சரிவு ஏன்?

webteam

உலக பணக்காரர் பட்டியலில் ஆறே நாள்களில் முதலிடத்திலிருந்து இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார், தொழிலதிபர் எலான் மஸ்க்.

'டெஸ்லா', 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகின் முதல் பணக்காரராக மாறினார். டெஸ்லா எலக்ட்ரிக் கார் பங்குகளின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான உயர்வு, மஸ்க்கை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை விட அதிக சொத்துக்களை சேர்க்க வைத்தது. இதனால், எலோன் மஸ்கின் நிகர மதிப்பு 188.5 பில்லியன் டாலராக மாறியது. இது, அக்டோபர் 2017 முதல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை வகித்துவரும் பெசோஸை விட 1.5 பில்லியன் டாலர் அதிகமாக கணக்கிடப்பட்டது.

கடந்த வாரம் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்ததை அடுத்து, அமேசான் நிறுவனரை பின்னுக்குத் தள்ளி உலகின் நம்பர் 1 என்ற பெருமையை பெற்றார் தொழிலதிபர் எலான் மஸ்க். ஆனால், இந்தப் பெருமை ஒரு சில நாள்கள்கூட மஸ்க்கிற்கு நீடிக்கவில்லை. நேற்றைய அமெரிக்க பங்குச் சந்தை முடிவில் டெஸ்லாவின் பங்குகளின் விலை சரிந்ததை அடுத்து, மீண்டும் முதல் இடத்தை அமேசான் நிறுவனருக்கு தாரைவார்த்துவிட்டு, இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் மஸ்க்.

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் திங்களன்று 8% சரிந்தன. செப்டம்பர் பிற்பகுதியில் இருந்து டெஸ்லாவின் மிகப்பெரிய ஒருநாள் வீழ்ச்சி இதுவாகும். டெஸ்லாவின் பங்குகளின் வீழ்ச்சி மஸ்கின் சொத்து மதிப்பில் இருந்து 13.5 பில்லியன் அமெரிக்க டாலர்களால் இழக்க நேரிட்டது. இதனால், மஸ்க் 176 பில்லியன் டாலர் சொத்துக்கள் தற்போது வைத்துள்ளார் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பங்குச்சந்தை சரிவு மஸ்க்கிற்கு மட்டுமில்லை, ஜெப் பெசோஸின் அமேசான் நிறுவனத்துக்கும் வீழ்ச்சி ஏற்பட்டது. அவரது பங்குகள் 2% என்ற அளவில் சரிந்ததால் பெரிய அளவில் பாதிப்பில்லை. இதனால், ஜெப் பெசோஸின் தற்போதைய நிகர மதிப்பு 181.3 பில்லியன் டாலராக உள்ளது.

இதற்கிடையே, தனது பங்குகளின் விலை அளவுக்கு அதிகமாக மதிப்பிடப்படுவதாக அந்த விலையில் மதிப்பில் ஒரு சதவீதம் மட்டுமே தனது நிறுவனத்தின் லாபம் இருப்பதாக கடந்த ஆண்டு மே மாதம் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் தெரிவித்ததை அடுத்து, அடுத்த சில தினங்களில் டெஸ்லாவின் பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.