'மதத்தை தவறாக வழிநடத்துவதால் பயங்கரவாதம் உருவெடுகிறது' என இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உரையாற்றியுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோ ஆபரேஷன்’ என்ற அமைப்பு 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பில் 57 நாடுகள் உறுப்பினராக உள்ளனர். இதன் தலைமையகம் சவுதி அரேபிய நாட்டின் ஜெட்டா நகரத்தில் உள்ளது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் நலனிற்காக பாடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கற்றார்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீர் மாவட்டத்திலுள்ள புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். அதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. அத்துடன் பாகிஸ்தானை உலக அளவில் தனிமைப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று கூறியிருந்தது. இதனையொட்டி சுஷ்மா சுவராஜ் இக்கூட்டத்தில் பங்கேற்பது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. மேலும் இக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு சில நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவிக்கலாம் என்றும் ஏதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சுஷ்மா சுவராஜ், “மதத்தை தவறாக வழிநடத்துவதால் பயங்கரவாதம் உருவெடுக்கிறது. ஒவ்வொரு மதமும் சமாதானத்தையே வலியுறுத்துகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரான மோதல் அல்ல” எனப் பேசியுள்ளார்.
மேலும் இந்தியாவை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷி பங்கேற்கவில்லை என்பதால் அவரது இடம் காலியாக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.