srilankan parliament file image
உலகம்

இலங்கை: அடுக்கடுக்காக கேள்வி கேட்ட எதிர்க்கட்சி தலைவர்.. அத்துமீறிய ஆளும்கட்சி உறுப்பினர்கள்!

இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. ராஜபக்ச சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா பேசிக்கொண்டிருந்தபோதே, அவர் கையில் இருந்த கோப்புகள் ஆளும் கட்சியினரால் பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

யுவபுருஷ்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வந்தது. குறிப்பாக இந்த நெருக்கடியால், கடந்த ஆண்டு வீதிக்கு வந்து போராடிய அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது, வீட்டிலிருந்து சிங்கப்பூருக்கு தப்பினார் கோத்தபய. அதிபர் பதவியையும் ராஜினாமா செய்த நிலையில், ரணில் விக்ரமசிங்க அதிபராக இருந்து வருகிறார். இந்நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடி விவகாரத்தில், ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உட்பட 13 பேருக்கு எதிராக தனியார் அமைப்பு ஒன்று இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பத்தினரே பொறுப்பு . பொருளாதார நெருக்கடிகு மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரே காரணம். 3 ராஜபக்சேக்கள், முன்னாள் மத்திய வங்கி கவர்னர்கள், நிதி அமைச்சக முன்னாள் செயலாளர் உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர். பொருளாதாரத்தை தவறாக கையாண்டதே நெருக்கடிக்கு காரணம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதஸா, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இழந்த பொருளாதாரம் மீட்கப்படுமா? ராஜபக்சே சகோதரர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீர்ப்புக்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார். இதனால், ஆத்திரமடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, அவர் கையில் இருந்த ஆவணங்களையும் பிடுங்கி வீசியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக அவையே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.