பாவெல் துரோவ் எக்ஸ் தளம்
உலகம்

டெலிகிராம் சிஇஓவுக்கு நிபந்தனை ஜாமீன்.. பிரான்ஸை விட்டு வெளியேறவும் தடை!

நீதிமன்றக் காவலில் இருந்த டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் துரோவ் நிபந்தனை ஜாமீனில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

Prakash J

உலகின் பிரபல சமூக ஊடகமான டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், கடந்த வார இறுதியில் பிரான்ஸ் நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் துணைபோவதாகவும், பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும், மேலும் பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. அவரது கைது நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், நீதிமன்றக் காவலில் இருந்த பாவெல் துரோவ் நிபந்தனை ஜாமீனில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஜாமீன் தொகையாக நீதிமன்றத்தில் சுமார் 5 மில்லியன் யூரோக்கள் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அவர் வாரம் இரண்டு முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தவிர, அவர் பிரான்ஸ் நாட்டைவிட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கின் விசாரணை இனி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: ”என்னை தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் யுபிஎஸ்சிக்கு கிடையாது” - பூஜா கேட்கர்