layoffs x page
உலகம்

ஷாக் கொடுக்கும் 2024 | ஒரே மாதத்தில் 27 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிய 40 நிறுவனங்கள்!

Prakash J

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு தொழில்நுட்ப நிறுவனங்கள் பல பொருளாதாரச் சரிவைச் சந்தித்தன. இதையடுத்து, பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக செலவைக் குறைக்கும் வகையில் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன. அது, எதிர்காலத்தில் தொடரும் எனவும் எச்சரித்திருந்தன. தற்போது தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் காரணமாக, மீண்டும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் இன்டெல், ஐபிஎம் மற்றும் சிஸ்கோ உள்ளிட்ட 40 பெரிய நிறுவனங்களில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 27,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இன்டெல் நிறுவனம் சுமார் 15,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.

அதாவது இன்டெல் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 15 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்டெல் நிறுவனத்தின் வருவாய் குறைந்ததை அடுத்து செலவினங்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதுபோல், சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் தங்களது மொத்த ஊழியர்களில் சுமார் 7 சதவீதம் பேரை வேலையிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் 6,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: விமான நிலையத்தில் சூட்கேஸைக் கடித்து சாப்பிட்ட இளம்பெண்.. அதிர்ந்த பயணிகளுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!

அதுபோல், ஐபிஎம் நிறுவனம் சீனாவில் தங்களுடைய ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவினை மூடியுள்ளது. இதன்மூலம் சுமார் 1000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். ஜெர்மனைச் சேர்ந்த சிப் மேக்கிங் நிறுவனமான இன்ஃபைனான் (Infineon) 1400 பேரை வேலையில் இருந்து நீக்குவதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. நிறுவனத்தின் வருமானம் குறைந்ததை அடுத்து இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாக அந்த நிறுவனம் கூறியது. மேலும் 1400 ஊழியர்களை வேறு நாடுகளுக்கு இடமாற்றம் செய்வதாகவும் அறிவித்துள்ளது.

அதுபோல், கோ ப்ரோ (GoPro) கேமரா தங்களது ஊழியர்களின் சுமார் 15 சதவீதம் பேர் அதாவது 140 பேரை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. அடுத்து, ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் புக்ஸ் ஆப் மற்றும் ஆப்பிள் புக் ஸ்டோர் குழுக்களில் பணியாற்றி வந்த 100 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. புகழ்பெற்ற டெல் நிறுவனமும் தங்களுடைய நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. அந்நிறுவனம் சுமார் 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது, உலகளாவிய பணியாளர்களில் 10% ஆகும்.

முன்னதாக, நடப்பு ஆண்டில் கூகுள், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் பணி நீக்க நடவடிக்கையை எடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 422 நிறுவனங்கள் மொத்தம் 1,36,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் | ஆஃபர் விலையில் திறக்கப்பட்ட மால்.. அரை மணிநேரத்தில் சூறையாடிய பொதுமக்கள்.. #ViralVideo