உலகம்

இந்திய விமான தளங்களுக்குக் குறி? சீனாவிடம் உதவி கேட்கும் பாக்.! என்ன நடக்கிறது எல்லையில்?

இந்திய விமான தளங்களுக்குக் குறி? சீனாவிடம் உதவி கேட்கும் பாக்.! என்ன நடக்கிறது எல்லையில்?

webteam

இந்திய எல்லையில் இருக்கும் விமானத் தளங்கள் குறித்த விவரங்களை சீனாவிடம் பாகிஸ்தான் கேட்டுள்ளது.

உலக அளவில் அண்டை நாடுகள் என்றாலே பிரச்னைதான். ஒவ்வொரு அண்டை நாடுகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் வாய்க்கால் வரப்பு சண்டை காலம்காலமாக நிலவி வருகிறது. அது இந்தியாவுக்கும் பொருந்தும். அண்டை நாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் எல்லைப் பிரச்சினையில் இந்தியாவிடம் மோதி வருகின்றன. அதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

சமீபகாலமாக இந்தப் பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி, அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றபோது, இந்திய வீரர்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டதுடன், எல்லையிலும் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இதுபோல் பாகிஸ்தானும் எல்லைப் பிரச்சினையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்திய எல்லையில் உள்ள விமானப் படை தளங்கள் குறித்த விவரங்களை சீனாவிடம் பாகிஸ்தான் கேட்டுள்ளது. தற்போது எல்லைப் பகுதிகளைப் பலப்படுத்தும் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், டிசிபிகளை (ditch-cum-bandhs) உருவாக்குதல், சேதமடைந்திருக்கும் தடுப்பு வேலி கம்பிகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தவிர, எல்லைப் பகுதிகளில் ஏவுகணைகளை நிலைநிறுத்தவும் இந்தியா தயாராகி வருகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டுள்ள பாகிஸ்தான், தற்போது சீனாவிடம் உதவி கோரியுள்ளது. பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (SUPARCO) சீனாவுடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானுக்கு சீனா அதிநவீன செயற்கைக்கோள் படங்களை வழங்க இருக்கிறது.

அதில், இந்திய எல்லையில் உள்ள 22 போர் விமானத் தளங்கள் குறித்த விவரங்களைப் பாகிஸ்தான் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தான் கோரியுள்ள செயற்கைக்கோள் படங்களில் இந்தியாவின் ஸ்ரீநகர், அடம்பூர், அம்பாலா, பதிண்டா, சிர்சா மற்றும் புஜ் போன்ற மிக முக்கிய விமானத்தளங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனா தரும் இந்தச் செயற்கைக்கோள் படங்கள், 0.6 மீட்டர் தெளிவுத்திறன் கொண்டதாக இருக்கும் எனவும், இதன்மூலம் துல்லியமாக அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது. எல்லைப் பிரச்சினை விவகாரத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கைகோர்த்திருப்பதை இந்தியாவும் ரகசியமாகக் கண்காணித்து வருகிறது.

- ஜெ.பிரகாஷ்