கோவை மாணவன் ஜீவந்த்  Twitter
உலகம்

லண்டன் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட தமிழக மாணவர்! என்ன நடந்தது?

கோவை அருகே உள்ள நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஜீவந்த் என்ற மாணவர் லண்டனில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rishan Vengai

கோவை மாவட்டம் நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள சென்ட்ரல் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ஜீவந்த் (25). இவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு கால படிப்பொன்றை பயில கடந்தாண்டு சென்றுள்ளார்.

கோவை மாணவன் ஜீவந்த்

இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று ஜீவந்த், இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் (Birmingham) கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த தகவல் ஜீவந்த் பெற்றோர்களுக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஜீவந்த் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து இன்னும் முறையான தகவலை லண்டன் போலீசார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

கோவை மாணவன் ஜீவந்த்

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தற்போது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜீவந்த்தின் மரணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள லண்டன் ஊடகவியலாளர் ஒருவர், “ஜீவந்த் சிவகுமாரின் முதல் இங்கிலாந்து பயணம் இது. அவர் தனது லட்சியத்திற்காக ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் வணிகம் படித்துவந்தார். தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது தந்தை, இறந்த தன் மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஜீவந்துக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர் கண்டுபிடிக்கப்பட்ட போது அவருடன் யாரும் இல்லை” என்றுள்ளார்.

பர்மிங்காம் ஊடகத்தின் அறிக்கையின் படி, “கடந்த 21ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் ஒரு ஆணின் (ஜீவந்த்) சடலம் பர்மிங்காமில் உள்ள மேட்ரான்ஸ் வாக்கின் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. அவரின் மரணம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தங்கியிருக்கும் இடத்திலிருந்து 200மீட்டர் தூரத்தில் தான் அந்த கால்வாய் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிகாலை நேரத்தில் ஏன் அவர் அங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை.

இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் போலீஸ் தரப்பில், ‘இது சந்தேக மரணம் என கருதப்படவில்லை’ என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் மாணவரின் பெற்றோர் சந்தேக மரணமாகவே இதை குறிப்பிடுகின்றனர்.