உலகம்

நாடு கடத்தப்பட்ட தமிழ்க் குடும்பம்: திடீர் உத்தரவால் திரும்பிய விமானம்!

நாடு கடத்தப்பட்ட தமிழ்க் குடும்பம்: திடீர் உத்தரவால் திரும்பிய விமானம்!

webteam

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடுகட்டத்தப்பட்ட தமிழ்க் குடும்பம் ஒன்று, திடீரென்று வந்த நீதிபதியின் உத்தரவால், திரும் பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்தவர் நடேசலிங்கம். பிரியா. இவர்கள் இருவரும் தனித்தனியாக 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா சென்றனர். அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கோபிகா (4), தருணிகா (2) என்ற குழந்தைகள் பிறந்தன. அடைக்கலம் கோரி, அவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்தனர். அதுவும் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர்கள், வீட்டில் இருந்து, பலவந்தமாக தடுப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘இலங்கைக்கு சென்றால், அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்’ என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்னை ஆஸ்திரேலியா முழுவதும் எதிரொலித்தது. அவர்களை நாடு கடத்க் கூடாது என்று கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டன.. 

இதைக் கண்டுகொள்ளாமல் கடந்த வியாழக்கிழமை இரவு, அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த, தனி விமானம் தயாரானது. விமான நிலையத்தின் அருகில் திரண்ட மக்கள், அரசின் முடிவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஆனாலும் விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

அப்போது நீதிபதி, தொலைபேசி மூலம் அவர்களை நாடுகடத்த தடை உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவு, பறந்து கொண் டிருந்த விமானத்தின் விமானிக்கு  தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விமானத்தை, டார்வின் விமான நிலையத்துக்கு திருப் பினார் விமானி. இதையடுத்து அவர்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டு ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.