ஆப்கானிஸ்தான்  ட்விட்டர்
உலகம்

“திருமணத்தை மீறிய உறவில் பெண்கள் இருந்தால், பொதுவெளியில் கொடூர தண்டனை” - தாலிபன் தலைவர்

”திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்கள் பொதுவெளியில் நிற்கவைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவர்” என தாலிபன் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்ஸதா தெரிவித்துள்ளார்.

Prakash J

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021இல் தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது தங்களின் முந்தைய ஆட்சி போல கொடூரமாக இருக்காது என தாலிபன்கள் அறிவித்தனர். ’இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடத்தப்படும்’ எனத் தெரிவித்த அவர்கள், பின்னர் நாட்கள் செல்லச்செல்ல கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர்.

இதனால் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான சுதந்திரம் முழுவதுமாகப் பறிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. குறிப்பாக, வயது வந்த பெண்கள் மேல்நிலைக் கல்வி பயில தடைவிதிக்கப்பட்டது. சிறுமிகளாக இருந்தாலும்கூட சிறுவர்களுடன் இணைந்து கல்வி பயில தடை என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தவிர ஆடை அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள், ஆண் மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், பொது இடங்களுக்கு ஆண் துணையின்றிச் செல்லக்கூடாது என்பதுடன் உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பல விளையாட்டு வீராங்கனைகள் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தாலிபனுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதையும் படிக்க: சந்தேஷ்காலி பாஜக வேட்பாளர்: விமர்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்.. புகார் அளித்த ரேகா பத்ரா!

இந்த நிலையில், ”திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களைப் பொதுவெளியில் நிற்கவைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவர்” என தாலிபன் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்ஸதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “சர்வதேச சமூகம் ஆப்கன் பெண்களின் உரிமைகள் பற்றி பேசி வருகின்றன. இது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது. பெண்களை கல்லால் அடித்து கொன்றால் அது பெண் உரிமைக்கு எதிரானது என நீங்கள் கூறுகிறீர்கள்.

ஆனால் விரைவில் நாங்கள் அதை நடைமுறைப்படுத்தப் போகிறோம். திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களை நாங்கள் கல்லால் அடித்தும், கசையடி கொடுத்தும் கொல்லும் நடைமுறையைக் கொண்டுவர உள்ளோம். பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். இது சமூக ஆர்வலர்களிடையேவும் உலக நாடுகள் இடையேவும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ - வாட்ஸ் அப் எண்ணுடன் பரப்புரையை ஆரம்பித்தார் சுனிதா! அடுத்த ராப்ரிதேவி?