அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பலவும், தலிபானின் பெண் உரிமை கோட்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வந்த நிலையில், ஆப்கனின் அரசு தரப்பு செய்தி தொடர்பாளர் சபிஹூல்லா, ‘ஆப்கனின் பெண் உரிமைகள்’ குறித்து அரசு தரப்பு ஆணை வெளியிட்டுள்ளார். அதில் “பெண் என்பவர் பொருள் அல்ல. அவர்களிடம் திருமணத்தின்போது அவர்களின் விருப்பம் இருக்கிறதா என்பது கேட்கப்பட வேண்டும்” என்று, பெண்களின் விருப்பதுக்கு மதிப்பளிக்கும் விஷயம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா ஆப்கனிலிருந்து வெளியேறியபின், ஆப்கனில் கடும் நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தலிபான் ஆட்சிக்கு, உலக நாடுகள் பலவும் எதிரான நிலைப்பாடு எடுத்திருப்பதால் அந்நாட்டு மக்கள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டு வருகின்றனர். உலக நாடுகளின் இந்த நிலைப்பாட்டுக்கு பின்னணியில் ஆப்கன் பெண் உரிமைகளை மறுப்பது முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது.
அதைத்தொடர்ந்தே இன்று இந்த அறிவிப்பை சபிஹூல்லா வழியாக அந்நாட்டு அரசு வெளியிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தனது அறிவிப்பில் அவர் “பெண் என்பவள், உன்னதமான மற்றும் சுதந்திரமான சக மனிதர். எவ்வித காரணத்துக்காகவும், அவர்களை யாரும் யாருக்கும் கொடுக்கக்கூடாது. அப்படி கொடுப்பது, நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். அதேபோல அறிவிப்பில், ‘கணவனை இழந்த பெண்களுக்கு, மறைந்த கணவனின் சொத்தில் உரிமை உள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டை பெற்றாலும்கூட, ‘பெண்கள் வேலைக்கு செல்வதற்கும், படிப்பதற்கும்கூட அவர்களின் விருப்பம் கேட்கப்படவேண்டும். அதை ஏன் குறிப்பிடவில்லை’ என விமரசனங்களும் எழுகிறது. ஆப்கனில் தலிபானின் 1996 - 2001 ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட ‘பெண்கள் ஆண் துணையின்றி தனியாக வெளியே வரக்கூடாது - தலை உட்பட உடலின் பாகம் அனைத்தும் முழுவதுமாக துணியால் போர்த்தப்பட்டிருக்க வேண்டும் - படிக்க செல்லக்கூடாது’ போன்ற நடைமுறைகள் இன்றுவரை பின்பற்றப்படுகிறது. சில இடங்களில் பெண்கள் உயர்ப்படிப்புக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என்று, அந்நாட்டு அரசு கூறுகின்றது. இருந்தாலும், பல இடங்களிலும் பெண்கள் துன்புறுத்தப்படுவதாக கள நிலவரங்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.
தகவல் உறுதுணை: reuters