Taliban women File image
உலகம்

“பொதுவெளியில் பெண்கள் பேசுவதற்கும் பாடுவதற்கும் தடை”- அத்துமீறும் தாலிபான்களின் ஆதிக்கம்! ஐ.நா கவலை!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொது இடங்களில் சத்தமாக பேசவும், பாடவும், தங்களின் முகங்கத்தை காட்டவும் தடை விதித்து புதிய சட்டம் ஒன்றை இயற்றி, பெண்களுக்கு எதிரான அடக்கு முறையை மீண்டும் அதிகரித்துள்ளது தாலிபான் அரசு.

ஜெனிட்டா ரோஸ்லின்

2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதிலிருந்து அங்கு பெண்கள் மீதான அடக்குமுறை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ஆட்சிப்பொறுப்பு ஏற்கும் முன்பு தாலிபான்கள் கூறுகையில், தங்களின் ஆட்சி முந்தைய ஆட்சிபோல கொடூரமாக இருக்காது என்று அறிவித்தனர். மேலும் ‘இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடத்தப்படும்’ எனத் தெரிவித்த அவர்கள், நாட்கள் செல்லச்செல்ல கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர்.

குறிப்பாக பெண்களின் சுதந்திரமும், பெண் மீதான அடக்குமுறையும்தான் அதிகரிக்கத் தொடங்கியது. பெண்கள் கல்வி கற்கும் உரிமையில் தொடங்கி, உடை உடுத்துவது என தற்போது பேச்சுரிமையில் வந்து நிற்கிறது.

புதிதாக இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம் பெண்கள் தங்களின் முகத்தை காட்டவும், பொது இடங்களில் சத்தமாக பேசவும், பாடவும் தடை விதித்துள்ளது. தாலிபான் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்சாதாவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விதி கடந்த புதன்கிழமை (நேற்று முன்தினம்) அமல்படுத்தப்பட்டது.

இந்த சட்டமானது, தாலிபான்களின் அமைச்சகத்தின்  Propagation of Virtue and the Prevention of Vice அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 114 பக்க ஆவணத்தின் ஒரு பகுதியாகும். இந்த சட்டத்தின்படி,

  • பிரிவு 13, "temptation" என்ற சட்டத்தில், பொதுவெளியில் பெண்கள் தங்களை முகத்தையும் சேர்த்து முழுவதுமாக துணியால் மூடிக்கொள்ள வேண்டும். இது மற்றவர்களை சலனப்படுத்துவதை தவிர்ப்பதாக கருதப்படுகிறது. உடுத்தப்படும் ஆடை மெல்லியதாகவோ, இறுக்கமாகவோ இருக்கக்கூடாது.

  • பொது வெளியில் பெண்கள் பேசுவதோ, பாடுவதோ கூடாது. ஏனெனில், பெண்கள் குரல் தனிப்பட்டது. இதனை மற்றவர்களை கேட்கக்கூடாது.

  • பெண்கள் தங்களின் உறவினர் அல்லாத மற்ற ஆண்களை நிமிர்ந்து பார்க்கக்கூடாது.

  • தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள், உறவினர்கள் இல்லாத ஆண்களும் பெண்களும் பேசுவது, பொதுப்வெளியில் இசை வாசிப்பது என அனைத்திற்கும் தடை.

  • பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளும் ஓட்டுநரும் தொழுகை செய்யும் நேரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு, தொழுகையை மேற்கொள்ள வேண்டும்

    என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து, ஐ.நா. சபை தனது கடும் அதிப்தியை வெளிப்படுத்தியுள்ளது. “இந்த கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை இன்னும் கடினமாக்கக்கூடும்” என்று கவலை தெரிவித்துள்ளது. மேலும், “அதிகரித்துவரும் அதிகார வரம்பு மீறல், சமுதாயத்திற்கு மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்றும் ஐ.நா.சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.