உலகம்

கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன் கதையா? - பெண்கள் உரிமையில் அத்துமீறும் தாலிபன்ஸ்!

கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன் கதையா? - பெண்கள் உரிமையில் அத்துமீறும் தாலிபன்ஸ்!

Sinekadhara

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகளையும் அடக்குமுறைகளையும் அமல்படுத்தும் இழிவான செயல்களில் ஈடுபட்டு வருவது உலகறிந்ததே.

அமெரிக்க ராணுவ ஆட்சியில் பெண்களுக்கு கிடைத்த உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு பெண்களுக்கான கல்வி நிறுவனங்களை மூடல், வேலைக்குச் செல்ல தடை, நிறைய பொது இடங்களுக்குச் செல்ல தடை போன்ற அனைத்து சுதந்திரங்களுக்கும் ஏற்கெனவே முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இந்நிலையில் தற்போது அவை அனைத்திற்கும் ஒருபடி மேலே சென்று விவாகரத்து செய்யப்பட்ட கணவர்களுடன் கட்டாயம் சேர்ந்து வாழவேண்டும் என நிர்பந்தம் விதித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் விவாகரத்து ரத்து!

அமெரிக்க ராணுவ ஆட்சியின்போது விவாகரத்து பெற்ற வெகு சிலரில் ஒருவர் மார்வா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2021ம் ஆண்டு தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, தற்போது விவாகரத்தான பெண்கள் தங்கள் கணவர்களிடம் திரும்பவேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மார்வா, “அட கடவுளே! சாத்தான் மீண்டும் திரும்ப வந்துவிட்டது. இந்த உத்தரவைக் கேட்ட நானும், என் குழந்தைகளும் அந்த நாளில் கதறி அழுதோம்” என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தொடரும் குடும்ப வன்முறை!

ஆப்கானிஸ்தானில் குடும்ப வன்முறைகளை எதிர்த்து போராட பெண்களுக்கு உரிமையில்லை. சட்டப்படி திருமணம் செய்த பிறகு தவறான கணவனிடமிருந்து விலகிச் செல்லவும் உரிமையில்லை. “பாலின பாகுபாடு வெறி” ஆப்கானிஸ்தானில் நிலவுகிறது என குறிப்பிட்டுள்ளது ஐ.நா. ஆப்கானிஸ்தானில் திருமணமான பத்தில் ஒரு பெண், தங்கள் இணையரால் உடல், பாலியல் மற்றும் மனதளவில் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாக ஐ.நா மிஷன் தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இன்றும் வன்முறையை விட விவாகரத்து தவறானது என்ற எண்ணமும், கணவரை பிரிந்து வாழ்வது மன்னிக்க முடியாத குற்றமாகவும் பார்க்கப்படுகிறது. கணவன் போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்தாலோ அல்லது நாட்டை விட்டு வெளியேறினாலோ மட்டும்தான் தாலிபன் அரசாங்கத்தின் கீழ் விவாகரத்து என்பது சாத்தியம் என AFP செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.