உலகம்

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு - தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு - தலிபான்கள் அறிவிப்பு

PT WEB

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் பெண்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்க விரும்பவில்லை என்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு தொலைக்காட்சியில் பேசிய தலிபான் அதிகாரி ஒருவர் இதை தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் பெண் ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது, அவர்கள் தாங்கள் வகித்த அரசுப்பணிகளுக்கு திரும்பவேண்டும் என்றும் அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.

அரசின் நிர்வாக கட்டமைப்பு ஏற்பாடுகள் இன்னும் தெளிவற்றதாக இருப்பதாக தெரிவித்த அந்த அதிகாரி, எனினும் ஆட்சி என்பது இஸ்லாமிய கருத்தியலை முன்னிறுத்தியே இருக்கும் என்றும் அவர் உறுதி படுத்தினார்.

தலிபான்கள் வசம் ஆட்சி சென்றதை அடுத்து, அச்சத்தால் உறைந்த ஆப்கான் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக பெண் அரசு ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் காலி செய்யப்பட்டு அனைவரும் தாயகம் திரும்பிவருகின்றனர்.