ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தலிபான் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டை கைப்பற்றியது தலிபான். அதோடு நாட்டு மக்களுக்கு பல்வேறு விதிமுறைகளையும் விதித்துள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தற்கொலைப் படைக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் தலிபான் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு எதிராக தற்கொலைப் படையை தங்களது முக்கிய அஸ்திரமாக தலிபான்கள் பயன்படுத்தி இருந்தனர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் தற்கொலைப் படையின் செயல்பாடு மங்கியுள்ளது. நாளடைவில் தற்கொலைப் படையில் அங்கமாக இருந்தவர்கள் பிரிந்து சென்றுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டும் பணியை தலிபான் மேற்கொண்டுள்ளது. தங்கள் நாட்டின் ராணுவத்தில் தற்கொலைப்படையை சேர்ப்பதன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு தீர்வு காண முடியும் என தலிபான் அமைப்பின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் தற்கொலைப் படையினரை சிறப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த உள்ளதாக தலிபான் தெரிவித்துள்ளது. இந்த படைப் பிரிவு ஒரே அணியாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தலிபானை அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தடுப்பு வேலிகள் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தலிபான்களின் தளபதி மவ்லவி சனாவுல்லா சங்கின் தெரிவித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த Tolo நியூஸ் தெரிவித்துள்ளது.