உலகம்

ஊரை சுத்தப்படுத்த உதவும் 'ட்ராஷ் டேக்' சேலஞ்ச்!

ஊரை சுத்தப்படுத்த உதவும் 'ட்ராஷ் டேக்' சேலஞ்ச்!

webteam

கிகி சேலஞ்ச், ஐஸ் பக்கெட், மோமோ சேலஞ்ச் போன்று 'ட்ராஷ் டேக்' என்ற சேலஞ்ச் சமூக வலைதளங்களில் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது சேலஞ்ச் ஹேஸ்டேக்கை உருவாக்கி அது குறித்து வீடியோ வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கிகி சேலஞ்ச் பிரபலமானது. இதனை ஆடிய பலரும் அதனை வீடியோவாக தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த நடனத்தால் உலகெங்கிலும் பல விபத்துகள் ஏற்பட்டன. 

அதேபோல் ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ பிரபலமானது. ஓடும் வாகனத்தின் முன் நின்று நடனம் ஆடுவது இந்த சேலஞ்சாக கூறப்பட்டது. இதுவும் சில இடங்களில் விபத்துக்கு வழிவகுத்தது. அடுத்து சமூக வலைதளங்களில் 10 இயர் சேலஞ்ச் (#10yearchallenge) என்ற ஹேஸ்டேக் பிரபலமானது. 

ஐஸ் பக்கெட், மோமோ சேலஞ்ச் போன்று பல சேலஞ்சுகளை கடந்து தற்போது ஆரோக்ய சேலஞ்சாக ‘ட்ராஷ் டேக்’ என்ற சேலஞ்ச் சமூக வலைதளங்களில் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

குப்பைகள் நிறைந்த பகுதியில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், பின்னர் அந்த குப்பைகளை தாங்களே சுத்தப்படுத்திய பின் எடுத்த புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து #TrashTag என்ற டேக்கில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் துவங்கிய இந்த சேலஞ்சானது, தற்போது இந்திய இளைஞர்களிடமும் தொற்றிக்கொண்டுள்ளது.

இந்த சேலஞ்ச் ஆரோக்யமான விஷயத்துக்கு பயன்படுவதாகவும் இதன் மூலம் நாடு சுத்தமாகும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.