model image x page
உலகம்

ஹிஜாப் அணிய தடை.. மீறினால் அபராதம்.. தஜிகிஸ்தான் அரசு அதிரடி!

Prakash J

உலகளவில் கடந்த சில ஆண்டுகளாக, ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஓர் அரசுக் கல்லூரியில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்து வர அந்தக் கல்லூரி முதல்வர் தடை விதித்தார். அந்தத் தடையை மீறி முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. இந்த தடை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஈரான் செஸ் வீராங்கனை ஹிஜாப் சர்ச்சையில் சிக்கினார். அடுத்து, இந்தோனேசியாவில் ஹிஜாப் அணியாத சில மாணவிகளுக்கு மொட்டை அடிக்கப்பட்டது. இப்படி, தொடர்ந்து ஹிஜாப் பற்றிய சர்ச்சைகள் உலகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது.

இந்த நிலையில், மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபோது தஜிகிஸ்தான் நாடு உருவானது. இந்த நாட்டில் 1 கோடிப் பேர் வசிக்கும் மக்களில், 96 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், தஜிகிஸ்தான் அரசு கல்வித் துறை, கடந்த 2007ஆம் ஆண்டு இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய உடைகள் ஆகியவற்றை மாணவர்கள் அணிவதற்கு தடை விதித்தது. அப்போதுமுதலே ஹிஜாப் மீதும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

இதையும் படிக்க: FactCheck|முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்? வைரலாகும் புகைப்படங்கள்.. உண்மை என்ன?

அந்த வகையில், தஜிகிஸ்தான் நாட்டில் தற்போது பெண்கள் ஹிஜாப் அணியவும் முக்கியமான பண்டிகைகளைக் கொண்டாடவும் தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கு ரூ.3 லட்சமும் மத தலைவர்களுக்கு ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வியட்நாம் சென்ற புதின்.. விரும்பாத அமெரிக்கா.. சந்திப்பில் நடந்தது என்ன.. உற்றுநோக்கும் உலக நாடுகள்!