"தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது; பயங்கரமான விளைவுகளை சீனா சந்திக்க வேண்டி வரும்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பங்கேற்றார். மாநாட்டுக்கு நடுவே அங்கிருந்த செய்தியாளர்களை ஜோ பிடன் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், "தைவான் மீது சீனா ஒருவேளை படையெடுத்தால் அமெரிக்கா என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?" என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
சீனாவின் 'ஒரே நாடு' கொள்கையை அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறது. அதே சமயத்தில், தைவான் என்பது சீனாவுக்கு சம்பந்தமே இல்லாத தன்னாட்சி பிரதேசம் ஆகும். எனவே, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனாவால் ஒருபோதும் சொந்தம் கொண்டாட முடியாது. அவ்வாறு தைவான் மீது சீனா படையெடுத்தால் அது அந்த பிராந்தியம் முழுவதையும் சிதைத்துவிடும். அதனை அமெரிக்கா என்றும் அனுமதிக்காது. தைவானை தங்களுடன் இணைக்க முயல்வது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை சீனாவுக்கு கூறிக்கொள்கிறேன். தைவான் மீது படையெடுத்தால் அதனை அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு தைவானை பாதுகாக்கும். இதனால் பயங்கர விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும்.
உக்ரைனில் இப்போது என்ன நடக்கிறது என்பதை சீனா கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் செய்து வரும் ஆயுத உதவிகள் குறித்தும் சீனாவுக்கு தெரியும். அதனால் இந்த விஷப்பரீட்சையில் அந்நாடு இறங்காது என நம்புகிறேன். இவ்வாறு ஜோ பிடன் கூறினார்.
முன்னதாக, தன்னாட்சி பிரதேசமான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா நீண்டகாலமாக கூறி வருகிறது. ஆனால் தைவான் அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்நிலையில், சீனாவுடன் தைவான் தானாக முன்வந்து இணைந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், ராணுவ நடவடிக்கை மூலம் தைவான் இணைக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.