லண்டனில் போன்ஹாம்ஸ் எனப்படும் ஏல நிறுவனமொன்று திப்பு சுல்தானின் வாள் விற்பனைக்கான ஏலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த வாள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள திப்பு சுல்தானின் அரண்மனையின் ஒரு பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. போர்களில் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள்களில் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதனால்தான் இந்த வாளை வாங்க ஏலத்தில் கடுமையான போட்டி நிலவியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏலத்தின்போது இந்த வாளை சொந்தமாக்கிக்கொள்ள இருவர் இடையே கடுமையான போட்டி நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போன்ஹோம்ஸ் ஏல நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் ஒயிட் பேசும்போது “திப்பு சுல்தானின் அனைத்து ஆயுதங்களிலும் இந்த வாள் தனிச்சிறப்பு வாய்ந்தது. திப்பு சுல்தானுடன் நெருங்கிய தனிப்பட்ட தொடர்பை கொண்டுள்ளது இது. பழமை மற்றும் சிறந்த கைவினைத்திறனை பெற்றிருப்பதால், வாள் தனித்துவமாகவும் இருந்தது. அதனால்தான் இதற்கு கடும் போட்டி நிலவியது. ஏலத்தின் இறுதியில் நாங்கள் நிர்ணயித்த விலையைவிட 7 மடங்கு அதிகமாக விற்பனையானது இந்த வாள்” என பெருமை பொங்க கூறியுள்ளார்.
திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசாவுக்கும் மகனாகப் பிறந்தார். 1782ல் தன்னுடைய தந்தை ஹைதரலியின் மரணத்திற்குப் பிறகு, 1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26 தன்னுடைய 32 வது வயதில் ‘சுல்தானாக’ அரியணை ஏறினார். அதன் பின்பு ஆங்கிலேயர்களை எதிர்த்து தொடர்ந்து போர் புரிந்தார் திப்பு சுல்தான். 1799ஆம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று 4 ஆவது மைசூர் போரில் ஆங்கிலேய படைகளால் தோற்கடிக்கப்பட்டு, வீர மரணத்தை தழுவினார். இதன்பிறகு, துணிச்சலின் அடையாளமாக கருதப்பட்ட திப்பு சுல்தானின் வாள் பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு வழங்கப்பட்டது.