உலகம்

ஃபேஸ்புக்கில் லைக் செய்தவருக்கு ரூ.2.66 லட்சம் அபராதம்..சுவிஸ் நீதிமன்றம் அதிரடி

webteam

விலங்குகள் நல ஆர்வலர் ஒருவரை இனவாதியாகவும், யூத எதிர்ப்பாளராகவும் அடையாளப்படுத்திய ஃபேஸ்புக் பதிவை லைக் செய்தவருக்கு ரூ.2.66 லட்சம் அபராதம் விதித்து சுவிட்சர்லாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எர்வின் கெஸ்லர் என்பவர் விலங்குகள் நல அமைப்பு ஒன்றினை தலைமையேற்று நடத்தி வருகிறார். கெஸ்லரை இனவாதத்தை ஆதரிப்பவராகவும், யூத எதிர்ப்பாளராகவும் அடையாளப்படுத்தி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பதிவினால் தன்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி கெஸ்லர் ஜூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றினைத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதிவிட்டவர்கள் பலருக்கு அபராதம் மற்றும் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குறிப்பாக அந்த பதிவினை லைக் செய்த ஒருவருக்கு 4,000 சுவிஸ் பிராங்குகள் (ரூ.2,66,016) அபராதம் விதித்தது.

கடந்த 2015ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த சைவ உணவுத் திருவிழாவில் எந்தெந்த விலங்குகள் நல அமைப்புகள் பங்கேற்க வேண்டும் என்ற தலைப்பின் கீழ் ஃபேஸ்புக்கில் விவாதம் ஒன்று நடந்தது. அந்த விவாதத்தின்போது எர்வின் கெஸ்லரை யூத எதிர்ப்பாளராக சித்தரித்து ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்த பதிவினை லைக் செய்த 45 வயது நபருக்கு அபராதம் விதித்து ஜூரிச் நீதிமன்ற நீதிபதி கேத்தரின் கெர்விக் உத்தரவிட்டார். கெஸ்லர் மீதான விமர்சனங்களின் உண்மைத் தன்மை உண்டு என்பதை பிரதிவாதி நிரூபிக்க தவறிவிட்டார் என்றும், இதனால் கெஸ்லரின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டது என்பதாலும் அபராதம் விதிக்கப்படுவதாக நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.