2022 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து போன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக (Discoveries concerning the genomes of extinct hominins and human evolution) இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலம் எவ்வாறு உருவானது? நமக்கும் நமக்கு முந்தைய மூதாதையருக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகள் என்ன? என்பது குறித்த அறிவியலின் ஆராய்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்றைய மனிதர்களின் அழிந்துபோன மூதாதையரான நியண்டர்தால்களின் மரபணுவை வரிசைப்படுத்திய ஸ்வீடன் ஆராய்ச்சியாளர் டெனிசோவா என்ற இதற்கு முன்னர் அறியப்படாத மனிதனின் மூதாதையர் ஒருவரையும் (ஹோமினின்) கண்டறிந்து உள்ளார்.
முக்கியமாக, சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து மனித குலம் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து தற்போது அழிந்து வரும் இந்த ஹோமினின்களிலிருந்து ஹோமோ சேபியன்களுக்கு மரபணு பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் ஸ்வான்டே பாபோ கண்டறிந்து உள்ளார்.
இந்தாண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாபுடியான் ஆகிய இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வெப்பநிலை மற்றும் தொடுதல் மூலமாக உடலில் நடக்கும் மாற்றங்களை, உடலை தொடாமல் அறியும் உணரிகளைக் கண்டுபிடித்ததற்காக இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பரிசை பெற்றனர்.