சமி பாஸ்ஸோ PT Web
உலகம்

‘மூப்படையும்’ நோயால் பாதிக்கப்பட்டு, மிக நீண்ட காலம் வாழ்ந்தவர், தன் 28-வது வயதில் காலமானார்!

புரோஜீரியாவால் பாதிக்கப்பட்டு மிக நீண்ட காலம் வாழ்ந்தவர் என்று பெயர் பெற்றிருந்த சமி பாஸ்ஸோ தனது 28 வயதில் காலமாகி உள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

புரோஜீரியாவால் பாதிக்கப்பட்டு மிக நீண்ட காலம் வாழ்ந்தவர் என்று பெயர் பெற்றிருந்த சமி பாஸ்ஸோ தனது 28 வது வயதில் நேற்று காலமானார்.

Hutchinson-Gilford progeria syndrome (HGPS) என்றழைக்கப்படும் புரோஜீரியா (Progeria) என்பது, விரைவில் மூப்படையும் குறைப்பாட்டால் பாதிக்கப்படுவதை குறிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்களின் உண்மையான வயதைவிட 8 மடங்கு வயதான தோற்றத்துடன் காணப்படுவார்கள்.

சமி பாஸ்ஸோ

இது ஒரு பிறவி மரபணுக்குறைபாடு. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறக்கும்போதே குறிப்பிட்ட மரபணுக் குறைபாட்டுடன் இருப்பார்கள் என்றும், இது மிகவும் அரிதான ஒரு மரபணுக் குறைபாடு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு வயதானவர்களுக்கு என்னென்ன உடல் நலப்பாதிப்புகள் ஏற்படுமோ அவை அனைத்தும் ஏற்படும்.

மேலும் சிறு வயதிலேயே தலைமுடி கொட்டி, தோல்கள் சுருங்கி, விரைவிலேயே முதுமை ஏற்பட்டு, மற்ற குழந்தைகளைப் போல ஓடியாடி விளையாட முடியாத நிலைமை இவர்களுக்கு ஏற்படும். இத்துடன் மிகவும் சோர்வாக உணறும் இவர்களின் உடல் தளர்ந்த நிலையில், சிறுநீரகப் பாதிப்பு, பார்வை பாதிப்பு, இதய பாதிப்பு போன்ற பிரச்னைகளையும் எதிர்கொள்ளும்.

சமி பாஸ்ஸோ

ஆய்வு ஒன்றின்படி, இவர்களின் குறைந்தபட்ச ஆயுட்காலம் 13.5 ஆண்டுகள் மட்டுமே. பிறக்கும் குழந்தகளில் எட்டு மில்லியன் மக்களில் ஒருவர் இவ்வகை நோயால் பாதிக்கிறார்கள். உலகளவில் 20 மில்லியனில் ஒருவரை இந்நோய் பாதிக்கிறது என்று தெரியவந்துள்ளது.

1995 இல் வடக்கு இத்தாலிய பிராந்தியமான வெனெட்டோவில் உள்ள ஷியோவில் பிறந்த சமி பாஸ்ஸோ என்பவருக்கு அவரது இரண்டு வயதில் புரோஜீரியா இருப்பது கண்டறியப்பட்டது. இவர், புரோஜீரியாவால் பாதிக்கப்பட்டு அதிக வாழ்நாட்கள் வாழ்ந்தவர் என்ற பெயரை பெற்றிருந்தார்.

சமி பாஸ்ஸோ

இந்நிலையில், இவர் தனது 28 வயதில் தற்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இவர், நேஷனல் ஜியோகிராஃபிக் ஆவணப்படமான “சாமிஸ் ஜர்னி” (Sammy's Journey) மூலம் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.