ஐந்தாண்டுகளில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அயதுல்லா அலி காமேனி தொலைக்காட்சி வழியே மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி ஈரான் ஆயுதப்படையினர் நடத்திய ஏவுகணைத்தாக்குதல், மிகச்சிறப்பான பணி என்று பாராட்டினார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய பிரார்த்தனை மையமான Mosalla மசூதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில், அவர்களிடையே உரையாற்றிய காமேனி, ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை, ஈரான் முதல் காசா வரை அனைத்து நாடுகளும் எதிரி மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட லெபனான் நாட்டு ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா நினைவு நிகழ்ச்சியும் அப்போது நடத்தப்பட்டது. அப்போது இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இறுதியாக 2020 ஆம் ஆண்டு பாக்தாத்தில் அமெரிக்கத்தாக்குதலில் கொல்லப்ட்டட தளபதி சுலைமானியின் நினைவு நிகழ்ச்சியில்தான் காமேனி உரையாற்றியிருந்தார். அதற்குப்பிறகு தற்போதுதான் ஈரான் தலைவர் காமேனி நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருக்கிறார்.
இதற்கிடையே, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் Abbas Araghchi லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு வந்து ஹெஸ்புல்லா, லெபனான் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.