சுனிதா வில்லியம்ஸ் pt web
உலகம்

விண்வெளி நிலையத்திற்கு மீன் குழம்பா? சமோசாவை எடுத்துச் செல்லாத சுனிதா வில்லியம்ஸ்.. நாசா சொன்னதென்ன?

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், தன்னுடன் மீன் குழம்பை எடுத்துச் சென்றுள்ளதாக நாசா தெரிவித்திருக்கிறது...

PT WEB

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 3ஆவது முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ளார். ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தில், நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று முன்தினம் அவர் அடைந்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்திற்குள் சென்றபின் மிதந்தபடி நடனமாடிய வீடியோ வெளியாகி ஆச்சர்யத்தை கொடுத்தது

இதனிடையே நாசா, இந்தியாவைச் சேர்ந்த தனியார் ஊடகத்திடம் தெரிவித்திருக்கையில், “சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு மீன் குழம்பு எடுத்துச் சென்றுள்ளார். இது வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை அவருக்கு தரும். அதேநேரம் இந்த முறை சுனிதா வில்லியம்ஸ், தனக்கு விருப்பமான சமோசாவை எடுத்துச் செல்லவில்லை” என தெரிவித்திருக்கிறது.

பயணத்திற்கு முன்பு தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த சுனிதா வில்லியம்ஸ், “விண்வெளிக்கு விநாயகர் சிலையைக் கொண்டு செல்லவுள்ளேன். அது எனக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்பு அவர் தனது விண்வெளிப் பயணத்தின்போது, பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் சமோசாக்களை கொண்டு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் விண்வெளிக்குச் செல்வதை, இந்தியர்கள் பெருமையாக கருதும் நிலையில், அவர் விநாயகர் சிலை, மீன் குழம்பு என இந்தியக் கலாசாரம் சார்ந்த விஷயங்களை தன்னோடு எடுத்துச் செல்வது, அப்பெருமை உணர்வை மேலும் அதிகரிக்கவே செய்கிறது.