இஸ்ரேல் ஹமாஸ் போர் pt web
உலகம்

மத்திய கிழக்கில் அசாதாரண சூழல்.. சரிந்த பங்குச் சந்தை.. அமெரிக்காவின் எச்சரிக்கை காரணமா?

PT WEB

சரிந்த பங்குச்சந்தை

பங்குச்சந்தைகள் சர்வதேச அளவில் சரிந்துள்ளன. இதற்கு அமெரிக்காவின் எச்சரிக்கையும் ஒரு காரணமாக இருக்கிறது. ஈரானும், ஹெஸ்புல்லாவும் இஸ்ரேலை எந்த நேரத்திலும் தாக்கக்கூடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது.

இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றுகள் மீதான தாக்குதலில் 12 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்டதால், இஸ்ரேலுக்கும், ஈரானுக்குமான பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த ஜூலை 31ஆம்தேதி, இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலில் பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பின் கமாண்டர் FUAD SHUKR கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட இருதலைவர்கள்

இதற்கடுத்த சில மணி நேரத்தில், ஈரான் புதிய அதிபர் Masoud Pezeshkian பதவியேற்பு விழாவுக்காக டெஹ்ரான் சென்றிருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கொல்லப்பட்டார். அவர் தங்கியிருந்த இடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியேவும் அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டனர். இந்த இரு தலைவர்கள் கொல்லப்பட்டதால், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் மத்திய கிழக்கு போராக விரிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கேற்ப, இஸ்மாயின் ஹனியேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் கடுமையான தண்டனையை அனுபவிக்கும் என்றார்.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலின் வடக்குப்பகுதியில் உள்ள BEIT HILLEL நகரின் மீது ராக்கெட்டுகளை ஏவி ஹெஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் காணொளியில் ஆலோசனை நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கென் ( ANTONY BLINKEN ) இஸ்ரேல் மீது, ஹமாசும், ஹெஸ்புல்லாவும் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிறுத்தப்பட்ட விமான சேவைகள்

ஈரான் மற்றும் ஹெஸ்புல்லா தரப்பில் இருந்து தீவிர தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க, பிரிட்டிஷ் போர் கப்பல்கள் நிலைநிறுத்தப்படும் என்று இந்நாடுகள் அறிவித்துள்ளன. ஏற்கனவே இந்தப் பகுதியில் இரண்டு பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் இருக்கின்றன.

மத்திய கிழக்கில் அசாதாரண சூழல் நிலவுவதால் விமான சேவைகள் இயங்கும்போதே அங்கிருந்து தங்கள் குடிமக்கள் வெளியேற வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஆகஸ்ட் 8 ஆம்தேதி வரை விமானப் போக்குவரத்துகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.