உலகம்

லண்டன் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: உயிர் தப்பிய பாப் பாடகி

லண்டன் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: உயிர் தப்பிய பாப் பாடகி

webteam

லண்டனில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நட்சத்திர ஓட்டலின் 12வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

லண்டனில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜ் மாவட்டத்தில் உள்ளது மாண்டரின் ஓரியண்டல் ஹைட்பார்க் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டல். பழமை வாய்ந்த இந்த ஓட்டல் சமீபத்தில்தான் புனரமைப்புச் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஓட்டலின் 12 வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஓட்டல் ஊழியர்கள், அங்கிருந்தவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். இதற்குள் தீ மளமளவென பரவியது. 12 தீயணைப்புகள் வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 120 தீயணைப்பு வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். 

ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பார் பாடகி ராபி வில்லியம்ஸும்,  பிரபல காஸ்மெடிக் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஜெமி கென் லிமாவும் அடங்குவர்.

ஜெமி கூறும்போது, ’இந்த விபத்தால் அதிர்ச்சி அடைந்தேன். சினிமாவில் பார்ப்பது போல இருந்தது. கொண்டு வந்த அனைத்தையும் இழந்து விட்டோம். ஆனால் பத்திரமாக இருக்கிறோம். கடவுளுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார். பாப் பாடகி ராபி வில்லியம்ஸ் தான் தப்பும் காட்சியை வீடியாவாக எடுத்து வெளியிட்டுள்ளார். 

இந்த விபத்தில் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.