உலகம்

குழந்தையின் தலையை வெட்டி கருப்பையிலேயே வைத்த மருத்துவ ஊழியர் - பாகிஸ்தானில் கொடூரம்

குழந்தையின் தலையை வெட்டி கருப்பையிலேயே வைத்த மருத்துவ ஊழியர் - பாகிஸ்தானில் கொடூரம்

ஜா. ஜாக்சன் சிங்

பாகிஸ்தானில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையில் இருந்த குழந்தையின் தலையை வெட்டிய ஊழியர், அதனை கருப்பையிலேயே வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியத்தால் இந்த தவறு நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தர்பார்க்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சனா குமாரி (32). இந்து மதத்தைச் சேர்ந்தவரான இவர் 10 மாத கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பிரசவம் பார்க்கும் மருத்துவர் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள மருத்துவ ஊழியர் ஒருவர் சனா குமாரிக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். இந்நிலையில், கருப்பையில் இருக்கும் பச்சிளம் குழந்தையை வெளியே எடுக்கும் போது, அதன் தலையை அவர் வெட்டி விட்டதாக தெரிகிறது. பின்னர் அந்த தலையை கருப்பையிலேயே வைத்து விட்டு குழந்தையின் உடலை மட்டும் வெளியே எடுத்துள்ளார்.

இதனால் சனா குமாரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நடந்த விஷயத்தை வெளியே சொல்லாமல், உடனடியாக அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அவரது உறவினர்களிடம் அந்த மருத்துவ ஊழியர் கூறியுள்ளார். இதையடுத்து, மிதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சனா குமாரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது, கருப்பையில் குழந்தையின் தலை மட்டும் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், சனா குமாரியின் வயிற்றை அறுவை சிகிச்சை மூலம் திறந்து அந்த தலையை வெளியே எடுத்தனர். பின்னர் போலீஸாருக்கும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில், சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போலீஸார் சென்ற போது, அந்த மருத்துவ ஊழியர் தலைமறைவாகி விட்டார். இக்கொடூர சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து மருத்துவ ஊழியரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அலட்சியத்தால் நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.