உலகம்

ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது: இலங்கை சபாநாயகர் கடிதம்

ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது: இலங்கை சபாநாயகர் கடிதம்

webteam

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்தார். அவரை பதவியை விட்டு நீக்கிய அதிபர் சிறிசேன, ராஜபக்சேவை திடீரென பிரதம ராக நியமித்தார். இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டது. ரணில், பிரதமராக தானே நீடிப்பதாக தெரிவித்து வரும் நிலையில் அங்கு உச்ச கட்ட நெருக்கடி நிலவுகிறது. 

இதற்கிடையில், இலங்கை நாடாளுமன்றத்தை முடக்கிய அதிபர் சிறிசேன, 14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவித்துள்ளார். அதிபரின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.  

அதில், பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, ரணில் விக்ரமசிங்‌கதான் பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி, ராஜபக்சவின் நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்பதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தை வரும் 7ஆம் தேதி கூட்டுவதாக தெரிவித்துவிட்டு, பின்னர் தாமதிப்பது ஏன் என சிறிசேனவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதனிடையே நாடாளுமன்றத்தைக் கூட்ட தாமதிப்பது ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் அடைப்பதற்குச் சமம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.