இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபட்சவை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தின் தொடக்கம்
இலங்கை அரசு மேற்கொண்ட தவறான பொருளாதாரக் கொள்கை, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் இலங்கை முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
மக்கள் போராட்டதை ஒடுக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏதும் பலனளிக்கவில்லை. மேலும், மக்களின் கோபம் அரசாங்கத்துடன் நின்றுவிடாமல் ராஜபட்ச குடும்பத்தினர் மீதும் பாய்ந்தது. இதன் விளைவாக, அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபட்ச வீட்டுக்கும், அவரது குடும்பத்தினரின் வீடுகளுக்கும் மக்கள் தீ வைத்தனர். மக்களின் கொந்தளிப்பை கண்டு பயந்தபோன மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் குடும்பத்தினருடன் தப்பியோடினார்.
புதிய பிரதமர் ரணில்...
அதன் பிறகு, புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை அதிபர் கோட்டாபய ராஜபட்ச தேர்ந்தெடுத்தார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவையும் அமைந்தது. தாங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுக் காட்டுகிறோம் என அவர்கள் மக்களிடம் சூளுரைத்தனர். இதனால் மக்களும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். ஆனால், பொருளாதாரம் மீள்வதற்கு பதிலாக மீண்டும் அதல பாதாளத்துக்கே சென்றது. பணவீக்கம் கடுமையாக அதிகரித்ததால் உணவுப்பொருட்கள், எரிபொருட்களின் விலை எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்தது.
வெடித்தது மக்கள் புரட்சி
இதனால் பொறுமை இழந்த மக்கள், மீண்டும் நேற்று போராட்டத்தை தொடங்கினர். முதல் நாள் போராட்டமே இலங்கையை ஸ்தம்பிக்க செய்யும் அளவுக்கு மக்கள் வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தலைநகர் கொழும்புவில் வந்து குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக, போராட்டக்காரர்கள் அதிபர் கோட்டாபய ராஜபட்சவின் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். தடுக்க வந்த ராணுவத்தினர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டனர்.
இதுகுறித்து ஏற்கனவே உளவுத் துறை எச்சரித்திருந்ததால் அதிபர் மாளிகையை விட்டு குடும்பத்துடன் கோட்டாபய ராஜபட்ச தப்பினார். அதிபர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள் பின்னர் மாளிகைக்கு தீ வைத்தனர்.
ரணில் வீட்டுக்கும் தீ
இதையடுத்து, அவர்களின் பார்வை பிரதமர் ரணில் விக்ரசிங்க மீது திரும்பியது. உடனடியாக அவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி அவரது வீட்டை போராட்டக்கார்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர். முதலில் பதவி விலக மறுத்த ரணில், பின்னர் மக்களின் கொந்தளிப்புக்கு பணிந்து ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். ஆனால், உடனடியாக அவர் ராஜினாமா செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை அவரது வீட்டுக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். இதில் அவரது வீடு மற்றும் ஏராளமான சொகுசு கார்கள் தீக்கிரையாகின.
மக்களின் போராட்டம் வன்முறை வெறியாட்டமாக மாறியதால் என்ன செய்வதென்று தெரியாமல் இலங்கை அரசாங்கம் விழிபிதுங்கி நின்றுக் கொண்டிருக்கிறது.