திரிகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் எந்தவித உடன்படிக்கையும் கையெழுத்தாகவில்லை என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
திரிகோணமலை இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரில் அமைந்துள்ள இயற்கை துறைமுகம் பண்டய காலம் முதலே பிரபலமான துறைமுகமாக இருந்துள்ளது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இலங்கை பிரதமர் விக்கிரமசிங்கே கடந்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது திரிகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் திட்டம் குறித்து செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், திரிகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் எந்தவித உடன்படிக்கையும் கையெழுத்தாகவில்லை என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் பேசுகையில், “திரிகோணமலை இயற்கை துறைமுகப்பகுதிகளை பெறுவதில் ஜப்பானுக்கும், இந்தியாவிற்கும் போட்டிநிலை உருவாகியிருக்கிறது. இந்தியாவுக்கு திரிகோணமலை எண்ணெய் கிணறுகளை வழங்கும் உடன்படிக்கை மட்டுமே எட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து திரிகோணமலை துறைமுகத்திற்கு பொருட்களைக் கொண்டுவந்து மீண்டும் வேறு நாடுகளுக்கு கொண்டுசெல்ல தயார் என்றால் அதற்கான அனுமதி அளிப்பதில் பிரச்சினையில்லை. ஆனால், திரிகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் எந்தவித உடன்படிக்கையும் இன்னும் கையெழுத்திடப்படவில்லை” என்று கூறினார்.