இலங்கை அதிபர் தேர்தல் முகநூல்
உலகம்

உலக நாடுகளே உற்று நோக்கும் இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

PT WEB

உலக நாடுகளே உற்று நோக்கும் தேர்தலாக மாறியிருக்கும் இலங்கை அதிபர் தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தலைநகர் கொழும்பில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பு பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

மேலும், காலை 9 மணிக்கு மேல்தான் வாக்காளர்கள் அதிகளவில் வந்து வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இத்தேர்தலில், இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். மேலும், எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுராகுமாரா திசாநாயக்க மற்றும் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே, தமிழர்களின் பொது வேட்பாளராக அரிய நேந்திரன் என 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 71 லட்சம் வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள். இதில் 40 லட்சம் இளைஞர்களின் வாக்குகள், வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய இத்தேர்தல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக, காவல்துறை, ராணுவம் என பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50% மேல் வாக்குகள் பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்தவகையில், இரவு 7 மணிக்கு மேல் இச்சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

இதில், 116 சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள், ஐரோப்பிய யூனியனில் இருந்து 78 பார்வையாளர்கள் கண்காணிக்க உள்ளனர். 73 ஆண்டுகள் இலங்கை வரலாற்றில் மும்முனை போட்டி நிலவுகிறது. பொருளாதார வீழ்ச்சிக்குப்பிறகு நடக்கும் அதிபர் தேர்தலில் வென்று ஆட்சி அரியணையில் ஏறப்போவது யார் என்பதற்கு 22 ஆம் தேதி விடை கிடைத்துவிடும்