இலங்கை தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரா குமரா திசநாயக்க மற்றும் தமிழர் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் உட்பட மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தேர்தல் கூட்டணி, வேட்புமனு தாக்கல் என பரபரப்பாக இருந்த இலங்கை அதிபர் தேர்தலில் இறுதி கட்ட பரப்புரை நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
வரும் 21ஆம் தேதி இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக தபால் வாக்குகள் செலுத்தப்பட்டுவிட்டன. இதனிடையே மத்திய கொழும்பு பகுதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், கொழும்புவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் இறுதி கட்ட பரப்புரையில் பங்கேற்றனர். அதேபோல் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரா குமாரா திசநாயக்க, கம்பா மாவட்டத்திலும் இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.
நாட்டின் பொருளாதாரம், அனைத்து மக்களின் முன்னேற்றம் என இறுதி கட்ட வாக்குறுதிகளை தலைவர்கள் அள்ளிவீசினர். தேர்தலை முன்னிட்டு காவல்துறை, ராணுவம் கூடுதலான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.