உலகம்

“ரணிலை மீண்டும் பிரதமராக்க மாட்டேன்” - அதிபர் சிறிசேன

“ரணிலை மீண்டும் பிரதமராக்க மாட்டேன்” - அதிபர் சிறிசேன

rajakannan

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் நியமிக்கப் போவதில்லை என்று அதிபர் சிறிசேன கூறியுள்ளார். 

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபட்சவை பிரதமராக அதிபர் மைத்ரிபால சிறிசேன பதவி பிரமாணம் செய்து வைத்த நாள் முதல் இலங்கை அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை இருந்த போது, நாடாளுமன்றத்தை சிறிசேன அதிரடியாக கலைத்தார். 

பின்னர், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வழக்குகள் தொடர, அதிபர் சிறிசேனவின் உத்தரவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. நாடாளுமன்ற நடவடிக்கைக்கும் தடையில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபட்ச தோல்வியை தழுவினார். சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றார். 

இதனிடையே, நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனவின் உத்தரவு சட்டவிரோதமானது என்று இலங்கை உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதிபர் சிறிசேன தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. 

தீர்ப்பு வெளியானதை அடுத்து, சிறிசேனா தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மஹிந்தா ராஜபட்சவும் கலந்து கொண்டார்.  

இந்நிலையில், திங்கட்கிழமை புதிய பிரதமரை அதிபர் சிறிசேன நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று அதிபர் சிறிசேன கூறியுள்ளார்.