உலகம்

அதிகாரமில்லை.. ஆனால் ஆடி முடித்த சிறிசேன !

அதிகாரமில்லை.. ஆனால் ஆடி முடித்த சிறிசேன !

webteam

இலங்கையில் நடக்கும் அரசியல் குழப்பங்கள் ஒன்றும் புதிதல்ல. பல்வேறு நாடுகளில் பல்வேறு கட்டங்களில் நடந்த ஒன்றே. ஆனாலும் அனைத்தையும் சட்டப்படி செய்வதாக நினைத்துக் கொண்டு, அதிகாரத்தின் மமதையில் தன்னையே மறந்து சிறிசேன செயல்படுகிறாரா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என சொல்லிக் கொண்டாலும், அதிபர் என்ற சர்வாதிகாரியின் அடக்குமுறைக்குள் உள்ள நாடு. அதிபரே அந்நாட்டின் மன்னர். முடிவுகளை எடுப்பதில் சகல அதிகாரமும் கொண்டவர். 

இலங்கையில் 2015-ல் நடந்த தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றதும் அதிபருக்கான அதிகாரங்களை குறைத்தார். பல்வேறு அதிகாரங்கள் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் மாற்றிக் கொடுக்கப்பட்டது. சில இடங்களில் அதிபர் எப்போதெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம், எங்கெல்லாம் தலையிடலாம் என்பவற்றில் சில விதிவிலக்குகள் கூட கொண்டு வரப்பட்டன. ஆனால் அதிபரின் அதிகாரங்களை குறைப்பேன் என கூறி ஆட்சிக்கு வந்த சிறிசேன, இப்போது அதிகாரங்களின் மையமாக தன்னைக் காட்டிக் கொள்ள நினைப்பதால், அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக தன்னை மாற்றிக் கொள்ள முயல்வதால், இத்தனைக் குழப்பங்களுக்கும் காரணமாகியிருக்கிறாரா என தெரியவில்லை.

இலங்கை அரசியல் சாசன சட்டத்தில் 19வது சட்டப்பிரிவு அதிபருக்கான அதிகாரங்களை மிகத் தெளிவாக வரையறுத்திருக்கிறது. அதில் பிரதமர் நியமனம், நாடாளுமன்றத்தை கலைத்தல் போன்றவை குறித்தெல்லாம் கூட கூறப்பட்டுள்ளது. ஆனால் சிறிசேன அதனை பயன்படுத்தாமல் அரிதாக பயன்படுத்தக் கூடிய பிரிவான சட்டப்பிரிவு 33(2) ஐ பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைத்திருக்கிறார். இது குறித்து பேசிய சட்ட நிபுணர்கள், பிரிவு 33(2) ஐ நீர்த்து போகச் செய்யும் வகையிலேயே 19வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் எப்போது அதிபர் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என கூறப்பட்டுள்ளது என்றனர்.

19வது சட்டத்திருத்தத்தில் அப்படி என்ன கூறப்பட்டுள்ளது என தேடிய போது, நாடாளுமன்றத்தை எந்த சமயத்தில் கலைக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு என விளக்கப்பட்டுள்ளது. அதில் “அரசு பொறுப்பேற்று நான்கரை வருடங்கள் பூர்த்தி செய்யும் வரையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைக்க அதிகாரம் இல்லை ; அதற்கு முன்னதாக கலைக்க விரும்பினால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைக்க ஆதரவு கொடுத்திருக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. ரணில் ஆட்சி முடிய இன்னும் இரண்டரை வருடம் பாக்கி இருக்கிறது, அவருக்கு நாடாளுமன்றத்தில் அதிகப்படியான உறுப்பினர்களின் ஆதரவும் இருக்கிறது. இந்நிலையில் தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் சிறிசேன.