இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக  pt web
உலகம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய இலங்கை அதிபர் அநுரா.. சவால்களை தாண்டி சாதிப்பாரா?

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு புதிய பிரதமர், அமைச்சரவை மூலமாக இலங்கை நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கை அதிபர் அநுரா குமார திநாயக்க முன் இருக்கும் சவால்கள்...

PT WEB

புதிய அதிபர் அநுரா குமார திசநாயக்க

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும் எதிர்பார்புகளுக்கு இடையே தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பு சார்பாக அநுரா குமார திசயநாக்க ஒன்பதாவது அதிபராக பதவி ஏற்றார். ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் பதவி ஏற்ற அடுத்த நாளே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பெரும் நெருக்கடியில் இருக்கும் இலங்கை நாட்டின் வளர்ச்சிக்கு அதிபர் எடுக்க இருக்கும் திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் ஏற்கனவே அதிபர் தேர்தல் நேரத்தில் இலங்கையை பொருளாதார வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வது, ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என பல வாக்குறுதிகளை அளித்து இருந்தார்.

அநுரா குமாரா திஸநாயக்கா

புதிய நாடாளுமன்றம் அமைய காலம் இருந்தாலும் உடனடியாக சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதில் முக்கியமாக பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை அரசுக்கு உலக வங்கியில் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடனாக பெற்று இருக்கிறார். அதேபோல் இலங்கை அரசின் தேவையில்லாத செலவுகளை குறைக்க தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியாக முன்னாள் அமைச்சர்கள், ஆளுநர்கள் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்ய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பலர் அதிபர் அலுவலகத்தில் தங்களுடைய வாகனங்களை சேர்த்துவிட்டனர்.

திறக்கப்பட்ட பலாலி-அச்சுவேலி பிரதான வீதி

அதேபோல் வெளிநாட்டினர் இலங்கைக்கு வர விசா பெறுவதில் பெறும் சிக்கல் நீடித்து வந்தது. எனவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலமாக 24 மணி நேரத்தில் விசா பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதேபோல் ஏற்கனவே இந்த நடைமுறைகளை சரியாக செய்யாத VFS நிறுவனம் மீது தடவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

பலாலி - அச்சுவேலி பிரதான வீதி திறப்பு

இலங்கையில் 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை சேதம் அடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க சீன அரசிடம் இருந்து 30 மில்லியன் உதவிப் பொருட்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது

30 ஆண்டு கோரிக்கையாக இருந்த பலாலி - அச்சுவேலி பிரதான வீதி திறக்கப்பட்டது. இது இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ஆன பின்னரும் திறக்கப்படாமல் இருந்ததால், வடக்கு மாகாணத்தில் இருந்த தமிழர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வந்தனர். இது நவம்பர் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாதிப்பாரா அதிபர்?

இலங்கை அரசு ஊழியர்களாக பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு இடைக்கால ஓய்வூதியமாக 3000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான 11 ஆயிரம் ஏக்கர் நிலங்களை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுத்தார் அதிபர்.

பொறுப்பு ஏற்று இரண்டு மாதம் கூட முடியாத நிலையில் சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்து இருந்தாலும் மாற்றத்தை நோக்கி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய சவாலாக இருக்கிறது.

அநுரா குமார திஸநாயக

நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில சட்டங்களை நிறைவேற்றுவதற்கும், புதிய திட்டங்களை கொண்டு வர நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியமாக இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு புதிய பிரதமர், அமைச்சரவை மூலமாக இலங்கை நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கை அதிபர் அநுரா குமார திநாயக்க முன் இருக்கும் சவால்கள்.... சாதிப்பாரா அதிபர் அநுரா விடை நவம்பர் 15 அன்று தெரியவரும்....

புதிய தலைமுறை டிஜிட்டல் செய்திக்காக செய்தியாளர் ராஜ்குமார்