இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் pt desk
உலகம்

அமைதியாக நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்! வாக்கு எண்ணிக்கையில் யார் முன்னிலை.. அடுத்து என்ன?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

PT WEB

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக அநுர குமரா திசநாயக தேர்வு செய்யப்பட்டார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அநுர குமரா திசநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே இருந்தது. இதன் காரணமாக புதிய சட்டங்களை இயற்றுவதில் ஆளும் அதிபர் தரப்பு கட்சிக்கு சிக்கல் இருந்தது. இந்த நிலையில், பதவியேற்ற அநுர குமரா திசநாயக, அடுத்த நாளே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார். 

இதனையடுத்து, இலங்கையில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 22 தேர்தல் மாவட்டங்களிலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 690 குழுக்கள் போட்டியிடுவதுடன் அந்த குழுக்களின் சார்பாக நாடு முழுவதும் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

இலங்கை நாடாளு மன்றத்தின் 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள். 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நாடாளு மன்றத்தில் பெரும்பான்மை பெற ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ 113 இடங்களை பெற்றிருக்க வேண்டும். அதேபோல், மூன்றில் இரண்டு பங்கு (150+) கிடைத்தால் அது சூப்பர் மெஜாரிட்டியாக மாறும்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட நிலவரப்படி, அதிபர் அநுர குமார திசநாயக்க கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

களத்தில் யார், யார்?

அதிபர் அனுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சித்தலைவராக இருந்த சஜித் பிரேமதாச, மற்றும் முன்னாள் இடைக்கால அதிபர் ரணிலின் புதிய சனநாயக முன்னணி, ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி உள்ளிட்ட சிங்களக் கட்சிகளும் எஸ்.ஸ்ரீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் களத்தில் நிற்கின்றன.