இலங்கையில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாலியல் வன்முறை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் நடமாட்டம் இருப்பதாகவும், உடனடியாக போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐநா மனித உரிமைகள் அமைப்புக்கு தமிழ் எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ் எம்பிக்கள் 15 பேர் மற்றும் போரில் பாதிக்கப்பட்டோர் அமைப்புகள் சார்பில் ஐநா மனித உரிமைகள் அமைப்புக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு இனிமேலும் கால அவசாகம் வழங்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவான மார்ச் மாதம் முடிவதற்குள் இலங்கை அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அவகாசம் அளித்த போதிலும், இதுவரையில் இலங்கை அரசு தனக்குக் கொடுத்த அவகாசத்தை முறையாக பின்பற்றவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் ஏற்கனவே பாலியல் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தாராளமாக நடமாடுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐநா மனித உரிமை அமைப்பு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கைக்கு அச்சம் போய்விடும் எனவும் அந்த மனு தெரிவிக்கிறது. இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐநா-வின் பொதுக்குழு, ஐ.நா பாதுகாப்பு குழு ஆதரவுடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு இது ஒன்றுதான் வழி என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.