இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து இங்கிருந்து கனடா செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து வெளிநாட்டுக்கு செல்ல முடியாதவர்கள், கள்ளத் தோணியில் தூத்துக்குடிக்கு வந்து கனடா செல்ல திட்டமிட்டிருப்பதாக தமிழகத்தின் க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய க்யூ பிரிவு காவலர்கள் மதுரையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 27 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 38 பேர் கர்நாடக மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தமிழக க்யூ பிரிவு காவல் துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தேடுதல் வேட்டையை தொடங்கிய கர்நாடக காவல் துறையினர், மங்களூருவில் தங்கியிருந்த 38 பேரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து மதுரை, மங்களூர் ஆகிய பகுதிகளுக்கு பிரிந்து சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.