உலகம்

“தாக்குதல் நடத்தப்படும் என இந்தியா எச்சரித்தது” - ரணில் விக்கிரமசிங்கே

“தாக்குதல் நடத்தப்படும் என இந்தியா எச்சரித்தது” - ரணில் விக்கிரமசிங்கே

rajakannan

இலங்கையில் நடத்தப்பட்டுள்ள குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக இந்தியா முன்கூட்டியே எச்சரித்ததாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியா‌ளர்களைச் சந்தித்த விக்கிரமசிங்கே பேசுகையில், “இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலில் நான் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அதிபர் அமைத்துள்ள விசாரணைக் குழுவுடன் தொடர்பில் உள்ளேன். விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச நாடுகள் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

நியூசிலாந்து கிறைஸ்ட் சர்ச்சில் 2 மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் இந்த தாக்குதலுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. எனினும் இப்போது அது பற்றி உறுதியாகக் கூறமுடியாது. காவல்துறை விசாரணைக்குப் பிறகே அது குறித்து தெரியவரும். தாக்கல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வந்தது. இந்தியாவும் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தும் பாதுகாப்பை பலப்படுத்தாத அதிகாரிகள் வேலை இழக்க நேரிடும். 

இந்த தாக்குதலில் வெளிநாட்டினரின் சதி இருந்துள்ளதாக தெரிகிறது. சிலர் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளார்கள். அதனால்தான் சர்வதேச நாடுகளிடம் உதவியை கோரியுள்ளோம். அவர்கள் உதவுவதாக உறுதி அளித்துள்ளார்கள். தாக்குதல் நடத்தியவர்களில் அனைவரும் அடையாளம் கண்டறியப்படவில்லை” என்று தெரிவித்தார்.